திபெத், விசா விவகாரத்தை சீனாவிடம் தொடர்ந்து எழுப்புவோம்

திபெத் விவகாரம், அருணாசலப் பிரதேச மக்களுக்கு சீனா தனித்தாளில் விசா வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளை அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு தொடர்ந்து எடுத்துச் செல்லும் என்று

திபெத் விவகாரம், அருணாசலப் பிரதேச மக்களுக்கு சீனா தனித்தாளில் விசா வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளை அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு தொடர்ந்து எடுத்துச் செல்லும் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தனிநாடாக இருந்த திபெத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனது நாட்டின் ஒருபகுதியாக சீனா மாற்றிக் கொண்டது. அங்கு உரிமைகளுக்காகப் போராடும் திபெத் மக்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. அதேபோல அருணாசலப் பிரதேசத்தையும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வரும் சீனா, அந்நாட்டு மக்களுக்கு தனித்தாளில் விசா வழங்கி வருகிறது.
இந்த இரு விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில்:
இந்த இரு விவகாரத்திலும் சீனாவிடம் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. அருணாசலப் பிரதேச மக்களுக்கு சீனா தனித்தாளில் விசா வழங்கும் விவகாரத்தை அந்நாட்டின் பல்வேறு நிலை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியா எழுப்பியுள்ளது. நானும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளோம்.
அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதனை சீனா ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு.
திபெத்தில் நடக்கும் அடக்குமுறையில் இந்தியா மௌனப் பார்வையாளராக இருந்து வருகிறது என்று கூறுவது தவறு. அங்கு பிரச்னை ஏற்படும்போது அது தொடர்பாக இந்தியா குரல் கொடுத்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு திபெத் புத்த மதத் துறவி தலாய் லாமா செல்ல விரும்பியபோது மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்தது. அவர் பலமுறை தவாங் பகுதிக்குச் சென்றுள்ளார். இந்திய நலன்களுக்கு எதிராக சீனா செயல்பட்டதால் மத்திய அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி கொடுப்பதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை வைத்து இரு நாட்டு உறவை மதிப்பிடக் கூடாது என்றார்.
இந்திய ஊடகத்துறையினருக்கு சீனா விசா மறுத்தது குறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மாநிலங்களவையில் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் இடையிலும் உறவை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் சீனா செல்லும் இந்திய ஊடகத் துறையினரை திபெத்தில் அனுமதிப்பது குறித்து சீன அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. சீனா செல்வதில்லை என்று தனிப்பட்ட முறையில் இந்திய ஊடகக் குழுவினர் முடிவெடுத்தனர். ஆனால், அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து சீன தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com