மீண்டும் நிதீஷ் முதல்வர்: பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் (66) மீண்டும் வியாழக்கிழமை பதவியேற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடனான மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், பாஜக ஆதரவுடன் தற்போது
பிகார் முதல்வராக நிதீஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி.
பிகார் முதல்வராக நிதீஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி.

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் (66) மீண்டும் வியாழக்கிழமை பதவியேற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடனான மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், பாஜக ஆதரவுடன் தற்போது ஆட்சியமைத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனிடையே, மாநிலத்தின் துணை முதல்வர் பொறுப்பு பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரும் நிதீஷுடன் இணைந்து பதவியேற்றுக் கொண்டார்.
இதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக இருவரும் இணைந்து செயல்படுவதைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டால் மகா கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. துணை முதல்வர் பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. அதனை லாலு திட்டவட்டமாக மறுக்கவே, நிதீஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியமைக்க பாஜக ஆதரவுக் கரம் நீட்டியது. இதையடுத்து, நீதிஷ் குமாரை மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி ஆட்சியமைக்க அழைத்தார். அதன்படி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வராக நிதீஷும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பதவியேற்றுக் கொண்டனர். அதேவேளையில் இந்த பதவியேற்பு விழாவை காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் புறக்கணித்தன. மாநில சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் நிதீஷுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பதாக அக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னதாக, பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், 'மாநில மக்களின் நலன் காப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே தங்களது அரசு முன்னெடுக்கும்' என்றார்.
இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக பேரவை சிறப்பு அமர்வு கூட்டப்படுவதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக ஆதரவு இருப்பதால் நிதீஷ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இருப்பினும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபடக் கூடும் எனத் தெரிகிறது.
அதனை சமாளிக்கும் வகையில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் ஆயத்தமாகி வருகின்றன. பிகாரில் ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநில பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 80 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸின் பலம் 27-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com