பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: மெஹபூபா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: மெஹபூபா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாதத் தலைவர்களின் வீடுகளில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தி, அவர்களைக் கைது செய்தனர். அவை அனைத்தும் தாற்காலிக நடவடிக்கைகளே. அவை, காஷ்மீரின் உண்மையான பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வைத் தராது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றை மீண்டும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையில்தான், மாநிலத்தில் பாஜக}மக்கள் ஜனநாயகக் கட்சி இடையே கூட்டணி உருவானது.
பாகிஸ்தானுடனான உறவில் சில பின்னடைவு ஏற்பட்டபோதிலும், அந்நாட்டுடனான உறவு வலுப்படுத்தப்பட வேண்டும்.
சக்திவாய்ந்த, திறமை மிக்கவராக பிரதமர் மோடி செயல்படுகிறார். காஷ்மீரின் நிலைமையை முன்னேற்றம் காணச் செய்வதற்கு அவரது தலைமையிலான மத்திய அரசு மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவும், 370ஆவது பிரிவும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளையும், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தையும் அளிக்கின்றன. அவை, காஷ்மீரின் சிறப்பு அடையாளமாகும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு}காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவில் திருத்தம் ஏதும் கொண்டுவரப்பட்டால் மிகப்பெரிய பிரச்னை வெடிக்கும்.
அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டால், காஷ்மீரில் ஒருவர் கூட இந்திய தேசியக் கொடியை ஏந்த மாட்டார்கள். காஷ்மீர் மக்களை சில ஊடகங்கள் தவறாகச் சித்திரிப்பது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் மக்களின் வலியை மத்திய அரசு உணர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com