சவூதியில் கொத்தடிமையாக விற்கப்பட்ட இந்தியப் பெண் தாயகம் திரும்பினார்

சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண் சுக்வந்த் கெளர், புதன்கிழமை தாயகம் திரும்பினார்.
சவூதியில் கொத்தடிமையாக விற்கப்பட்ட இந்தியப் பெண் தாயகம் திரும்பினார்

சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண் சுக்வந்த் கெளர், புதன்கிழமை தாயகம் திரும்பினார்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு வந்த அவரை அவரது கணவரும், குடும்ப உறுப்பினர்களும் வரவேற்றனர்.
இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்பியிருப்பது மறுபிறவி எடுத்ததைப் போல உள்ளதாகக் கூறிய அவர், தன்னை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சுக்வந்த் கெளர் (55). சவூதி அரேபியாவுக்கு பணிவாய்ப்பு தேடி சுற்றுலா விசாவில் சென்ற அவரை கொத்தடிமையாக சிலர் விற்பனை செய்துவிட்டதாக அவரது கணவர் குல்வந்த் சிங் என்பவர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், அவரை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதன் விளைவாக தற்போது அவர் தாயகம் திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சுக்வந்த் கெளர் கூறியதாவது:
சவூதி அரேபியாவில் ரூ.3.5 லட்சத்துக்கு என்னை விற்றுவிட்டனர். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அங்கு பல்வேறு சித்ரவதைகளுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டேன். சைவ உணவுப் பழக்கம் கொண்ட எனக்கு வலுக்கட்டாயமாக மாமிசங்கள் புகட்டப்பட்டன.
அந்த நரகமான சூழலில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்தது மறு பிறப்பு எடுத்ததைப் போல உள்ளது. ஒருவேளை மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உதவாமல் இருந்திருந்தால், எனது குடும்பத்தினருடன் நான் சேர்ந்திருக்க முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com