வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறதா? இல்லை என்கிறது வருமான வரித்துறை

வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களை விட, தென்னிந்திய நகரங்களில் தான் கணக்கில் வராத சொத்துக்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையின் வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறதா? இல்லை என்கிறது வருமான வரித்துறை


புது தில்லி: வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களை விட, தென்னிந்திய நகரங்களில் தான் கணக்கில் வராத சொத்துக்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையின் வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில், இந்தியாவின் தெற்கு நகரங்களான பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி நகரங்களில் கணக்கில் காட்டப்படாத சொத்து அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வட இந்திய நகரங்களில், நிதித் தலைமையகமான மும்பையிலோ, இந்திய தலைநகர் புது தில்லியிலோ கூட இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படவில்லையாம்.

இந்தியாவில் அதிக அளவில் சோதனை செய்யப்பட்ட 14 நகரங்களில் ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்டதிலும், அதிக அளவில் பணம், சொத்து பறிமுதல் செய்யப்பட்டதிலும் பெங்களூருதான் டாப். 

கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனைகள் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

2016ல், பெங்களூருவில் மட்டும் 25 சோதனைகள் நடைபெற்று, ரூ.64,84 கோடி அளவுக்கு பணமும், ரூ.1,854.45 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை 72 ஆக உயர்ந்து, ரூ.131.82 கோடி பணமும், ரூ.4,590.92 கோடி சொத்துக்களின் ஆவணங்களும் என உயர்ந்தது.

இதோடு ஒப்பிட்டால் மும்பையில் 2016ம் ஆண்டு ரூ.35 கோடியும், ரூ.1,726 கோடி சொத்தும், 2017ல் ரூ.115 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இதில் வெறும் 20 கோடி ரூபாய்தான் கணக்கில் வராத பணம்.

பெங்களூருவை அடுத்து சென்னை தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2016ம் ஆண்டு 17 சோதனைகளில் ஒட்டுமொத்தமாக ரூ.1,330 கோடி கணக்கில் வராத சொத்துக்களும், 2017ல் ரூ.3,327.66 கோடி கணக்கில் வராத சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 2016ல் ரூ.93.84 கோடி பணமும், 2017ல் ரூ.429.74 கோடி பணமும் அடங்கும்.

2016 ஆம் ஆண்டில், தாங்களாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்த போதும், வருமான வரித்துறையின் வரிஏய்ப்பு பிரிவு தனது பணியை தீவிரமாக முடுக்கிவிட்டிருந்தது. 

தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தாங்களாக முன் வந்து அறிவிக்கப்படாத வருவாயை அறிவிக்க நேரம் ஒதுக்கிய பின்னர், வரி செலுத்துவோர் மத்தியில் பயத்தை உண்டாக்குவதற்கு "அனைத்து வகையான முறைகளும்" பயன்படுத்தப்பட்டன. 

அவர்களது தொலைபேசிகளை கண்காணித்து, அவ்வப்போது தொழிலதிபர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து பல நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் எப்போதுமே கண்காணிப்புப் பணி நடந்து கொண்டே இருக்கும். எப்போதுமே நாங்கள் ஒரு விதமான அழுத்தத்துடனே இருப்போம் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தென்னிந்திய நகரங்களின் மிகப்பெரிய தொழிலதிபர்களை எல்லாம் விசாரணைக் குழுவினர் பின்தொடர ஆரம்பித்தனர். ஆனால், வருமான வரித்துறையில் போதிய அளவு ஊழியர்கள் இல்லாததாலும், புலனாய்வுத் துறையினரால் சேகரித்து அளிக்கப்படும் தகவல்களை சரிபார்க்கும் பணி அதிகரித்ததாலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை.

ஆனால், தென்னிந்தியாவில் வருமான வரித்துறையினரால் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. இதுவே மிகப்பெரிய பலன்தான். ஆனால் அந்த அளவுக்கு வட இந்தியாவில் கைப்பற்ற முடியவில்லை என்கிறது வருமான வரித்துறைத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com