காஷ்மீர், தில்லி, ஹரியாணாவில் என்ஐஏ அதிரடி சோதனை

காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்ட பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதாகக் கூறப்படுவது தொடர்பாக, காஷ்மீர், தில்லி, ஹரியாணாவின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிரடி சோதனை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சனிக்கிழமை சோதனை நடத்திய தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சனிக்கிழமை சோதனை நடத்திய தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்.

காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்ட பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதாகக் கூறப்படுவது தொடர்பாக, காஷ்மீர், தில்லி, ஹரியாணாவின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து தாங்கள் நிதியுதவி பெறுவதாக, ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட விடியோவில் நயீம் கான் என்ற பிரிவினைவாதத் தலைவர் கூறும் காட்சி கடந்த மாதம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
அதனைத் தொடர்ந்து அவரிடமும், பிரிவினைவாத அமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹுரியத்தைச் சேர்ந்த ஃபரூக் அகமது தார் மற்றும் காஜி ஜாவித் பாபா ஆகியோரிடமும் தில்லியில் என்ஐஏ விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தலைநகர் தில்லி, காஷ்மீர், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சனிக்கிழமை அதிகாலை அதிரடி சோதனை நடத்தியது.
பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கீலானியின் மருமகன் அல்டாஃப் ஃப்ன்டூஷ், தொழிலதிபர் ஜகூர் வாதாலி, மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் தலைமையிலான அவாமி செயற்குழுக் கட்சியின் மூத்த தலைவர் ஷஹீத்-உல்-இஸ்லாம், ஹுரியத் மாநாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புகளின் இரண்டாம் நிலைத் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில் ரூ.1.5 கோடி ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை என்ஐஏ ஆய்வு செய்து வருகிறது.
பிரிவினைவாதத்துக்கு பாகிஸ்தானிலிருந்து வரும் நிதியுதவி குறித்து மத்திய அரசு அமைப்பொன்று சோதனை நடத்துவது இது இரண்டாவது முறையாகவும்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் நிதியுதவி தொடர்பாக சையது அலி ஷா கீலானி உள்ளிட்ட பிரிவினைவாதத் தலைவர்களின் வீடுகளில் கடந்த 2002-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர். எனினும், இதுதொடர்பாக யார் மீதும் முதல் தகவலறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யவில்லை.
தற்போது என்ஐஏ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரிலும் பிரிவினைவாதத் தலைவர்கள் எவருடைய பெயரும் இடம் பெறவில்லை.
எனினும், பிரிவினைவாத அமைப்புகளான ஹுரியத் மாநாட்டுக் கட்சி, ஹிஸ்புல் முஜாஹிதீன், துக்தரன்-ஏ-மில்லத், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவற்றின் பெயர்களும், பாகிஸ்தானில் வசித்து வரும் ஜமாத்-உல் தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுவின் பெயரும் தற்போது என்ஐஏ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் இடம் பெற்றுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசுவது, பொது சொத்துக்களை நாசம் செய்வது, பள்ளிகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களுக்காக ஹஃபீஸ் சயீதுவிடமிருந்து பிரிவினைவாதத் தலைவர்கள் நிதியுதவி பெறுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, என்ஐஏ-வின் திடீர் சோதனை, காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, அமைதி நிலையை நிலைநாட்ட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்று என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com