எல்லைப் பிரச்னை இருந்தும் நல்லுறவு: மோடியின் கருத்துக்கு சீனா வரவேற்பு

சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்தாலும், அந்த நாட்டுடன் நல்லுறவு நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதை சீனா வரவேற்றுள்ளது.

சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்தாலும், அந்த நாட்டுடன் நல்லுறவு நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதை சீனா வரவேற்றுள்ளது.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை ரஷியா சென்றார். அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற 18-ஆவது இந்திய - ரஷிய வர்த்தக மாநாட்டில் பேசிய மோடி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும், இரு நாட்டு எல்லைப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இதுவரை ஒரு குண்டு சப்தம் கூட கேட்டதில்லை என்றும், பொருளாதாரம், முதலீடுகளில் இரு நாடுகளிடையே நல்லுறவு நிலவுவதாகவும் கூறினார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் திங்கள்கிழமை கூறியதாவது:
சீனா குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேர்மறையாகப் பேசியிருப்பதை வரவேறகிறோம். இந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடுகளான சீனாவும், இந்தியாவும் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டுமென்பதில் இரு நாட்டுத் தலைவர்களும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அவர்களது பேச்சுவார்த்தைகளில் அந்தப் பிரச்னை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைதியும், சமாதானமும் தொடர வேண்டும் என்பதற்காக மிகத் தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. இரு நாட்டு மக்களின் நலன்களைப் பேணும் வகையில், இந்தியாவும், சீனாவும் நல்லுறவை தொடர்ந்து மேம்படுத்தி வரும்.
இந்தியா - சீனா உறவில் ஏற்படும் முன்னேற்றம் இந்தப் பிராந்தியத்துக்கே நன்மையளிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com