ம.பி.: போலீஸ் சுட்டு 5 விவசாயிகள் பலி: ஊரடங்கு உத்தரவு அமல்

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதி.
மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதி.

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே 5 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனால், மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது. ஆனால், இந்தத் தகவலை மன்த்செளர் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வழங்கக் கோரி மத்தியப் பிரதேச விவசாயிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்திருந்தார். இருப்பினும், அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அது வன்முறையாக வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக வாகனங்கள், கடைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
சில மணி நேரங்கள் நீடித்த இச்சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவரபூமியாகக் காட்சியளித்தது. இதில் 5 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.சிங் பிறப்பித்தார். இதனிடையே, வன்முறையில் 5 விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, அதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று தெரிவித்த அவர், அதுதொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
முன்னதாக, வன்முறை பரவாமல் இருக்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தன்னை விவசாயி மகன் என பிரகடனப்படுத்திக் கொள்ளும் முதல்வர், இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி சாடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com