ம.பி.: ராகுல் கைதாகி விடுதலை

மந்த்சௌரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக மத்தியப் பிரதேசத்துக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின்னர்
மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த  விவசாயிகளின் குடும்பத்தினரை வியாழக்கிழமை சந்தித்து  ஆறுதல் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

மந்த்சௌரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக மத்தியப் பிரதேசத்துக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:

தில்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்கு தனிவிமானத்தில் ராகுல் காந்தி வியாழக்கிழமை வந்தார். அங்கிருந்து சித்தோர்கர் மாவட்டம், நம்பாஹத் எனும் கிராமத்துக்கு கட்சிப் பிரமுகரின் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ராகுல் காந்தி அமர்ந்து வந்தார். அங்கிருந்து மத்தியப் பிரதேச எல்லையையொட்டி உள்ள தலியா எனும் கிராமத்தில் விவசாயிகளைச் சந்திப்பதற்காக அவர் 100 மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றார். அவருடன் ஏறக்குறைய 2,000 பேர் இருந்தனர். 150 வாகனங்களும் அவருக்குப் பின்னால் அணிவகுத்துச் சென்றன.

விவசாயிகளுக்கு ஆதரவாக அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், அங்கிருந்து காரில் அவர் மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்தார்.
மந்த்சௌரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை ராகுல் பார்க்க செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
அவருடன் வந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், கமல் நாத் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றின் விருந்தினர் மாளிகை காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு ராகுல்
விடுவிக்கப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது போலீஸாருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுலுக்கு அனுமதி: இந்நிலையில், காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மந்த்சௌரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்திக்கு அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் கூறுகையில், "நீண்ட போராட்டத்துக்குப் பிறகு போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளைச் சந்திக்க ராகுல் காந்திக்கு மந்த்சௌரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது' என்றார்.

போக்குவரத்து விதியை மீறினாரா ராகுல்?

மத்தியப் பிரதேசத்துக்கு வருவதற்கு முன் ராஜஸ்தானில் கட்சி பிரமுகரின் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சிறிது தூரம் ராகுல் பயணித்தார். அப்போது, அவர் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிகிறது.
"இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால் அவர் போக்குவரத்து விதிகளை மீறினாரா?' என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி மீது சாடல்

கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:
பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்வதில்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பம்; விவசாயிகளின் கடனை அவர் ரத்து செய்யமாட்டார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்கு உரிய விலையை அவரால் (மோடி) நிர்ணயித்து தர முடியாது. அவர்களுக்கு இழப்பீடும் தரமாட்டார். மாறாக, விவசாயிகளுக்கு துப்பாக்கிக் குண்டுகளை மட்டும் அவரால் தர முடியும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com