நாடு முழுவதும் 800 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள்: மத்திய அரசு முடிவு

இரண்டு ஆண்டுகளுக்குள் நாடெங்கிலும் உள்ள 800 மாவட்ட தலைமை தபால் அலுவலங்களில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குள் நாடெங்கிலும் உள்ள 800 மாவட்ட தலைமை தபால் அலுவலங்களில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் 150 மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில் கடவுச் சீட்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 800 மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில் இத்தகைய சேவை மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். கடவுச் சீட்டுகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியத்தைக் குறைப்பதே எங்களது நடவடிக்கையின் நோக்கமாகும். தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, தொலைதூர மாவட்ட தலைமைத் தபால் நிலையங்களில் கடவுச் சீட்டு சேவை மையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நூதனத் திட்டத்தின்கீழ், தலைமைத் தபால் நிலையங்கள், கடவுச் சீட்டு அலுவலகங்களின் முகப்பு அலுவலகமாகப் பயன்படுத்தப்படும்.
கடவுச் சீட்டுகளை வழங்குவதற்கான சேவைகளை இவ்வாறு நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மட்டுமன்றி, அவற்றைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கடவுச் சீட்டு பெறுவதில் தரகர் முறையை ஒழிக்கும் வகையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com