குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் நாளில் தம்பதி உள்பட 6 பேர் வேட்புமனு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான புதன்கிழமை 6 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் இருவர் கணவன்-மனைவியாவர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான புதன்கிழமை 6 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் இருவர் கணவன்-மனைவியாவர்.
ஜூலை 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மராஜன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் சிங் குஷ்வாகா, தெலங்கானாவைச் சேர்ந்த பாலா ராஜ், மும்பையைச் சேர்ந்த முகமது படேல், சாய்ரா முகமது படேல் தம்பதியினர், புணேவைச் சேர்ந்த விஜயபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் விஜயபிரகாஷ் வேஷ்டியை மட்டும் அணிந்து வந்திருந்தார்.
'தங்களில் ஒருவர் குடியரசுத் தலைவராகவும், மற்றொருவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்' என்று மனு தாக்கல் செய்யும்போது தேர்தல் அதிகாரியிடம் முகமது படேல் தெரிவித்தார்.
வேட்மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வாக்காளர் அட்டையின் நகல், டெபாசிட் தொகையான ரூ.15,000 ஆகியவற்றை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுவை 50 பேர் முன்மொழிய வேண்டும். 50 பேர் வழிமொழிய வேண்டும். அவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள எம்.பி., எம்எல்ஏக்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வேட்புமனு ஏற்கப்படும் என்பது விதிமுறையாகும்.
முதல் நாளில் மனு தாக்கல் செய்த யாரும் இந்த விதிமுறையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அவர்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிடும்.
இதனை, தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள ஒருவர், 'எனது வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தெரியும். என்னைப் போன்ற சாமானியனால் தேவைப்படும் 100 பேரிடம் கையெழுத்துப் பெற முடியாது. என்னைப் பைத்தியக்காரன் என்று நினைப்பீர்கள். நாடாளுமன்றம் உள்ளிட்ட நமது அமைப்புகள் அரசியல் கட்சிகளால் பூட்டப்பட்ட சிறையாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com