குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தில்லியில் முதல்முறையாக கூடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தில்லியில் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தில்லியில் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தில்லியில் முதல்முறையாக கூடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்வதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் திமுக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் அவற்றின் முக்கிய தலைவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தில்லியிலுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை முதல்முறையாக கூடி குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்தனர்.
அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
சோனியாவுடன் இன்று சந்திப்பு: இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை சந்திக்கிறது.
அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளரை மத்திய அரசு நியமிக்கவில்லை எனில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com