கோர்க்காலாந்து போராட்டம்: 5-ஆவது நாளாக இயல்பு நிலை பாதிப்பு

தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டத்தினால், டார்ஜீலிங் மலைப் பகுதியில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் இயல்பு நிலை
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் நகரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர்.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் நகரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர்.

தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டத்தினால், டார்ஜீலிங் மலைப் பகுதியில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினரின் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால், அங்கு பதற்றம் நிலவுகிறது. அதையடுத்து, போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர். அரசு அலுவலகங்கள் முன்பாகவும், கோர்க்காலாந்து நிர்வாக அமைப்பின் அலுவலகங்கள் முன்பாகவும் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோர்க்கா அமைப்பினர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவதைத் தடுப்பதற்காக, டார்ஜீலிங் மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இணையதளச் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும், உணவகங்களும் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
சாலை மறியல்: சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, சிக்கிம் மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே கோர்க்கா அமைப்பினர் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் உருவபொம்மையை அவர்கள் எரித்தனர்.
முன்னதாக, சிக்கிம் தலைநகர் காங்டாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மாநில அரசு, மேற்கு வங்க அரசைக் கேட்டுக் கொண்டது. அதற்கு, சிக்கிம் மாநிலத்துக்குச் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
22-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்நிலையில், டார்ஜீலிங் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, சிலிகுரியில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். அந்தக் கூட்டத்தில் தாம் பங்கேற்காவிட்டாலும், கூட்டத்தை மற்ற அமைச்சர்கள் வழிநடத்துவார்கள் என்று அவர் கூறினார். நெதர்லாந்தில், வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சேவைகள் தின நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக, அவர் விமானத்தில் புறப்படும் முன் இதைத் தெரிவித்தார். எனினும், மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த டார்ஜீலிங் தொகுதி எம்எல்ஏ அமர்சிங் ராய் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com