ம.பி.: கடந்த 10 நாள்களில் 15 விவசாயிகள் தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடன் தொல்லை காரணமாக 3 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடன் தொல்லை காரணமாக 3 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 5 பேர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் சொந்த மாவட்டமான சீஹோரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்திலுள்ள மந்த்சௌர் பகுதியில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
சீஹோர் மாவட்டம், ஜமூனியா குர்ட் கிராமத்தைச் சேர்ந்த பன்ஸிலால் மீனா (55), விடிஷா மாவட்டம், சயார் பாமோர் கிராமத்தைச் சேர்ந்த ஜிவான் சிங் மீனா (35), நீமச் மாவட்டம், பிப்ளியா வியாஸ் கிராமத்தைச் சேர்ந்த பியாரிலால் ஓத் (60) ஆகிய 3 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் மனமுடைந்த இவர்கள், தற்கொலை முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து மந்த்சௌர் முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலருமான மீனாட்சி நடராஜன் கூறுகையில், 'தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் தகவலின்படி நாட்டிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது வேதனையளிக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com