மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் போலி தகவல்: காவல்துறை விசாரணை

நிலம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களைக் கணினியில் பதிவேற்றி அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய அமைச்சரவைச்

நிலம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களைக் கணினியில் பதிவேற்றி அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய அமைச்சரவைச் செயலர் உத்தரவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலி செய்தி குறித்து தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சமூக வலைதளங்களான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்) உள்ளிட்டவைகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஒரு சுற்றறிக்கை மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் பெயரில் பரவியது.
அதில், நாடு முழுவதும் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நிலம், சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் கணினியில் பதிவேற்றி அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை முறைப்படி கட்டாயம் இணைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கடைசி நாள். அதன் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத சொத்து ஆவணம், பினாமி சொத்தாகக் கருதப்பட்டு ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான யோசனையை பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கையின் நகல், அனைத்து மாநில அரசின் தலைமைச் செயலர்கள், கூடுதல் செயலர்கள், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையதளங்கள், மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டன. இது பற்றிய தகவல் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்தவுடன் அந்த சுற்றறிக்கை விவரம் போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி தகவலை பரப்பிய விஷமிகளை அடையாளம் காண இந்த விஷயத்தில் காவல்துறைக்கு உதவுமாறு கணினி குற்ற தடுப்புப் பிரிவினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அந்த உயரதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com