கடன் தள்ளுபடி கோருவது வாடிக்கையாகிவிட்டது: வெங்கய்ய நாயுடு

கடனை தள்ளுபடி செய்யக் கோருவது இப்போது வாடிக்கையாகிவிட்டது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி கோருவது வாடிக்கையாகிவிட்டது: வெங்கய்ய நாயுடு

கடனை தள்ளுபடி செய்யக் கோருவது இப்போது வாடிக்கையாகிவிட்டது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ள நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியது:
வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இது பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஆகாது. எந்த வழியிலும் இல்லாத நிலையில் கடைசி கட்டமாக மட்டுமே கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கையை முதலில் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயப் பொருள்கள் அதிகம் விளையும்போது அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கான அதிநவீன கிடங்குகள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்ல விலை கிடைக்கும் வரை விளைபொருள்களைப் பாதுகாக்க முடியும் என்றார்.
வறட்சி, விளை பொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணத்தால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கெனவே விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துவிட்டன. கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.50 ஆயிரம் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்வதாக கர்நாடக அரசு புதன்கிழமை அறிவித்தது.
தமிழகம், ராஜஸ்தான், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com