ராம்நாத் கோவிந்த் இன்று வேட்பு மனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்.
ராம்நாத் கோவிந்த் இன்று வேட்பு மனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவருமே ஏற்கெனவே ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர்.
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக (அம்மா அணி), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அனைத்து மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர்கள், பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் வேட்பு மனு தாக்கலின்போது உடனிருப்பார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் (71) கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ள அவர், பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு இருமுறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், அதிமுகவின் இரு பிரிவுகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வாஜ்பாயிடம் ஆசி பெற்றார்

புதுதில்லி, ஜூன் 22: குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றார். இந்தச் சந்திப்பின்போது கோவிந்தின் மனைவி சவிதாவும் உடனிருந்தார்.
முன்னதாக, ராம்நாத் கோவிந்த் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை புதன்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அண்மையில் தேர்வு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com