கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் நலன் காக்கப்படும்: சுஷ்மா உறுதி

கத்தாரில் வசித்து வரும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்
கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் நலன் காக்கப்படும்: சுஷ்மா உறுதி

கத்தாரில் வசித்து வரும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கத்தார் மீது பல்வேறு அரபு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் இத்தகைய உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் கூறி வளைகுடா நாடான கத்தார் மீது சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளிட்டவை பொருளாதாரத் தடை விதித்தன.
இதனால், பல்வேறு நெருக்கடிகளை அந்நாடு சந்தித்து வருகிறது. கத்தாரின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இந்நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று ரமண குமார் என்பவர் சுட்டுரை வாயிலாக சுஷ்மாவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, அவர் சனிக்கிழமை அளித்த பதில்:
கத்தாரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். அவர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் இருப்பது உறுதி செய்யப்படும். எனவே, இந்த விவகாரத்தில் கவலை கொள்ளத் தேவையில்லை என்று அதில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.
கத்தாரில் உள்ள இந்தியர்கள், தாயகம் திரும்ப வசதியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு இரு நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com