ம.பி. அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மூன்று ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம்

தேர்தல் செலவு தொடர்பாக தவறாக கணக்கு காட்டியதற்காக மத்தியப் பிரதேச நீர்வளம் மற்றும் சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை தேர்தல் ஆணையம் மூன்று ஆண்டுகளுக்குத் தகுதிநீக்கம்
ம.பி. அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மூன்று ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம்

தேர்தல் செலவு தொடர்பாக தவறாக கணக்கு காட்டியதற்காக மத்தியப் பிரதேச நீர்வளம் மற்றும் சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை தேர்தல் ஆணையம் மூன்று ஆண்டுகளுக்குத் தகுதிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அரசில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா, ததியா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.
அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது தனது தேர்தல் செலவுகள் தொடர்பான சில தகவல்களைப் பதிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி குற்றம்சாட்டினார். அவர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 2009-இல் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நரோத்தம் மிஸ்ராவுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து நரோத்தம் மிஸ்ரா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். எனினும், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸýக்கு எதிராக அந்த நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், நரோத்தம் மிஸ்ராவை மூன்று ஆண்டுகளுக்குத் தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் ததியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவானது சிவராஜ் சிங் சௌஹான் அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
"நரோத்தம் ராஜிநாமா செய்ய வேண்டும்': தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நரோத்தம் மிஸ்ரா உடனடியாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அஜய் சிங் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "பாஜக அமைச்சர்கள் தேர்தல்களில் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது' என்று விமர்சித்தார்.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் கூறுகையில், "அமைச்சர் நரோத்தமுக்கு எதிரான வழக்கானது, பணம் கொடுத்து தமக்கு ஆதரவாக ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தது (பெய்டு நியூஸ்) தொடர்பானது' என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய சட்டப்பிரிவின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விவேக் தன்கா கருத்து தெரிவிக்கையில், "பெய்டு நியூஸ் குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை 3 ஆண்டுகளுக்குத் தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பாஜகவுக்கு அந்த மாநிலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

மேல்முறையீடு செய்வேன்: நரோத்தம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் போபாலில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
பெய்டு நியூஸ் தொடர்பான புகாரின்பேரிலேயே நான் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக எனது வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், இந்தப் புகாரை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் சமர்ப்பிக்கவும் இல்லை. அது பற்றி தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிடவும் இல்லை.
கடந்த 2008-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நான் பெற்ற வெற்றி தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அத்தேர்தலுக்குப் பிறகு, 2013-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நான் மக்களின் தீர்ப்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க இயலாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com