அரசு பங்களாவை காலி செய்யுமாறு கபில் மிஸ்ராவுக்கு பொதுப்பணித் துறை  நோட்டீஸ்

அமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு தில்லி பொதுப்பணித் துறை (பிடள்யுடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு பங்களாவை காலி செய்யுமாறு கபில் மிஸ்ராவுக்கு பொதுப்பணித் துறை  நோட்டீஸ்

அமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு தில்லி பொதுப்பணித் துறை (பிடள்யுடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் நீர் வளம், கலாசாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கபில் மிஸ்ராவை மே 6-ஆம் தேதி அமைச்சரவையில் இருந்து நீக்கி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடவடிக்கை எடுத்தார். தில்லியில் நீர்வள நிர்வாகத்தை சரிவர கையாளாததால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. இந்நிலையில், அரவிந்த் கேஜரிவாலிடம் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ரூ.2 கோடியை மே 5-ஆம் தேதி அளித்ததை நேரில் பார்த்ததாக காரவல் நகர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினரான கபில் மிஸ்ரா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், தண்ணீர் லாரி கொள்முதல் ஒப்பந்த ஊழல் விவகாரம் தொடர்பாகவும் கேஜரிவால் உள்ளிட்டோர் மீது கபில் மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார். அதேபோன்று, தில்லியில் ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட பலவகையான வாகனங்களுக்கு பொருத்தப்படும் சிஎன்ஜி கருவியை விற்பதற்கு தில்லி அரசிடமிருந்து அனுமதி பெற்ற நிறுவனம் கனடாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி சீனாவில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் சிஎன்ஜி கருவிகளை விற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து, தண்ணீர் லாரி ஊழல் தொடர்பாக சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்திருந்தார். மேலும், தில்லி ஆம் ஆத்மி தலைவர்கள் சிலருக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், தில்லி நீர் வளத் துறை அமைச்சராக இருந்தபோது கபில் மிஸ்ராவுக்கு சிவில் லைன்ஸில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அந்த பங்களாவில் இருந்து காலி செய்யுமாறு தில்லி பொதுப் பணித் துறையிடமிருந்து கபில் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமைச்சர் பதவியில் இருந்தால் மட்டுமே பொதுப் பணித் துறையால் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்கும் சலுகை உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டால் அடுத்த 15 தினங்களுக்கு மட்டுமே அரசு பங்களாவில் குடியிருக்க முடியும். விதிகளின்படி, கபில் மிஸ்ரா அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க முடியாது. இதைக் கவனத்தில் கொண்டு பங்களாவில் இருந்து விரைவில் காலி செய்யுமாறு பொதுப் பணித் துறை மூலம் அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

அரசுப் பங்களாவை கபில் மிஸ்ரா காலி செய்யும் விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பு தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அத்துறைக்கு குறிப்பு அனுப்பியிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com