காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பள்ளி வளாகத்துக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகளை 14 மணி நேர சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பள்ளி வளாகத்துக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகளை 14 மணி நேர சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரின் பாந்தா செளக் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓர் அதிகாரி உயிரிந்தார். ஒரு காவலர் காயமடைந்தார்.
ஸ்ரீநகர் ராணுவப் படைப் பிரிவின் தலைமையகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள, பாதுகாப்பு கெடுபிடி நிறைந்த பகுதியில் இந்தத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி அருகிலுள்ள டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்துக்குள் பதுங்கினர்.
அதையடுத்து, அந்தப் பள்ளி வளாகத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
அந்த வளாகத்தில் 36 அறைகளைக் கொண்ட 7 பெரிய கட்டடங்கள் உள்ளன.
இந்தச் சூழலில், பள்ளி வளாகத்துக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கினர். பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை 3.40 மணியளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. 14 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு, இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
எனினும், பள்ளி வளாகத்தில் முழுமையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் இரண்டு ராணுவீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, சுற்றி வளைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், உண்மையில் எத்தனை பேர் உள்ளனர் என்பது ராணுவ நடவடிக்கை முடிந்த பிறகே தெரிய வரும் என்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் தெரிவித்தார்.
மோதல் மூலம் பள்ளி வளாகத்துக்கு பெரும் சேதத்தை விளைவித்து, அந்தப் பள்ளியில் இனி யாரும் கல்வி கற்க முடியாதவாறு செய்யும் நோக்குடன் பயங்கரவாதிகள் அந்த வளாகத்துக்குள் புகுந்துள்ளனர். எனவே, 36 அறைகளைக் கொண்ட மிகப் பெரிய கட்டடத்தில், எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் பயங்கரவாதிகளைப் பிடிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, இந்த நடவடிக்கையை முடிக்க பல மணி நேரங்கள் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளால் சனிக்கிழமை இரவு கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வைத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பொதுமக்கள் சண்டைப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க ராம் முன்ஷிபாக் முதல் செம்போரா பகுதி வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள தகவல் பரிமாற்றத்தின் வேகம் வெகுவாகக் குறைக்கப்பட்டதால், காஷ்மீர் பகுதியில் இணையதளச் சேவை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு சிறப்புச் செயலர் ரீனா மித்ரா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com