குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார் சவாலாக விளங்குவார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு கடும் சவாலாக விளங்குவார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு கடும் சவாலாக விளங்குவார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வெறும் அடையாளப் போட்டிக்காக மீரா குமாரை எதிர்க்கட்சிகள் களமிறக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்எல்ஏக்களைப் பொருத்தவரை பாஜகவின் பலம் எதிர்க்கட்சிகளை விட அதிகமாகவே உள்ளது.
மேலும், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து அவரது வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக சுதாகர் ரெட்டி, செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார் ஆதரித்து வருவது துரதிருஷ்டவசமானது. மீரா குமாரை வெறும் அடையாள வேட்பாளராக நாங்கள் முன்னிறுத்தவில்லை. அவர் பாஜக வேட்பாளருக்கு கடும் போட்டியாக விளங்குவார்.
தற்போது மீரா குமாருக்கு ஆதரவாக 4 லட்சம் வாக்குகள் உள்ளன. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவைத் திரட்டி அவருக்கு வெற்றி தேடித் தர பாடுபடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com