தேசிய கல்விக் கொள்கை: இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைப்பு

தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை
தேசிய கல்விக் கொள்கை: இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைப்பு

தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
இந்தக் குழுவில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவமும், அனுபவமும் கொண்ட அறிஞர்கள் இடம்பெற்றிருப்பதால், தொலைநோக்குப் பார்வையுடன் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரி ரங்கனுக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர், மத்திய திட்டக் குழு முன்னாள் உறுப்பினர் என பல்வேறு முகங்கள் உண்டு. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் அவரது தலைமையில் இக்குழுவை அரசு அமைத்துள்ளது.
அந்தக் குழுவில், கேரளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ் கன்னம்தானமும் இடம்பெற்றுள்ளார். கேரளத்தின் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்கள் 100 சதவீத கல்வியறிவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, பாபா சாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராம்சங்கர் குரீலும் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்களைத் தவிர, கர்நாடக மாநில ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் செயலர் எம்.கே.ஸ்ரீதர், மொழியியல் அறிஞர் டி.வி.கட்டிமணி, குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியர் மஸார் ஆசிஃப், உத்தரப் பிரதேச கல்வித் துறை முன்னாள் இயக்குநர் கிஷன் மோகன் திரிபாதி, கணிதவியல் அறிஞர் மஞ்சுள் பார்கவா, மும்பை எஸ்என்டிடி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் வேறுபட்ட கலாசாரம், மாறுபட்ட மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் உருவாக்கவுள்ள தேசியக் கல்விக் கொள்கை அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.
மேலும், குழுவில் இடம்பெற்றுள்ள 9 பேரும் ஒவ்வொரு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் கல்விக் கொள்கையில் அவற்றின் தாக்கம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் முன்னாள் அமைச்சகச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் இதேபோன்றதொரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளையும் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும்போது மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com