கேரள நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிடம் போலீஸார் தீவிர விசாரணை

கேரள நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நதீர்ஷா ஆகியோரிடம் போலீஸார் புதன்கிழமை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கேரள நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நதீர்ஷா ஆகியோரிடம் போலீஸார் புதன்கிழமை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகை புறப்பட்டார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், நடிகையை கடத்திச் சென்று அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், காரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நடிகை அங்கிருந்து தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகை புகார் அளித்ததன் பேரில், இதில் தொடர்புடையதாக 'பல்சர்' சுனில், மார்ட்டின், விஜீஷ் உள்ளிட்ட 6 பேரை கொச்சி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீஸாரிடமும் அவர் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் கூறியிருந்ததாவது:

நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 'பல்சர்' சுனிலின் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்த வழக்கில் எனது பெயரை சேர்ப்பதற்கு சிலர் பணம் கொடுத்திருப்பதாகவும், அதற்கு மேல் பணம் கொடுத்தால் எனது பெயர் அந்த வழக்கில் அடிபடாது என்றும் அவர் என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லாதபோது, எனது பெயரை இதில் சேர்ப்பதற்கு சிலர் ஏன் முயற்சிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் திலீப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும், திரைப்பட இயக்குநருமான நதீர்ஷாவுக்கு ஆலுவா போலீஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

அதன்படி, ஆலுவா காவல் நிலையத்துக்கு நடிகர் திலீப்பும், நதீர்ஷாவும் புதன்கிழமை சென்றனர். அப்போது அவர்களிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. புதன்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 1.05 மணி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது, நடிகை கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். தேவைப்பட்டால், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com