சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுயநிதி பொறியியல் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆ
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆ

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் இரண்டாவது செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவரும், அகில இந்திய சுயநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை புரவலருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் அனூஷ் கட்டாரியா, பொதுச் செயலர் கே.வி.கே.ராவ், துணைத் தலைவர்கள் பி.செல்வராஜ், ஸ்ரீநிபூபாலன், செயலர் ஈஸ்வர மூர்த்தி, ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஆர்.எம். கிஷோர், சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து மற்றும் கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைமைப் புரவலர் ஆர்.எஸ்.முனிரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பை முடித்து வெளியே வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவோராக அல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குவோராகவும் திகழ வேண்டும் என்ற கனவுத் திட்டத்துடன் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு தரும். அதேவேளையில், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் தற்போது ஆசிரியர் - மாணவர்கள் விகிதம் 1:15 என்று உள்ளது. இதனை 1:25 விகிதமாக மாற்றும் வகையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட எம்.கே.காவ் குழு அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரே மாதிரியான பாடத் திட்டத்தையும், சீரான கல்விக் கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும். மேலும், நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில், "அகில இந்திய தொழில்நுட்பம் 2010' விதிகளின்படி மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும். கல்வித் துறைக்கென பிரத்யேக வங்கியை உருவாக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் உணவுக் கட்டணமó, போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட எந்தவொரு கட்டணத்திற்கும் மத்திய அரசு விதிக்க உத்தேசித்துள்ள சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கல்லூரிகள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். கல்லூரி வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் ஏற்கெனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் எங்கள் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என்றார் முனிரத்தினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com