ஜாகீர் நாயக்கின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் ரூ.18.37 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் ரூ.18.37 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக், இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் மற்ற மதங்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரது அமைப்பு சார்பில் பல்வேறு தேசவிரோதச் செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்திய தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ஜாகீர் நாயக் மற்றும் சிலர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்தது. ஜாகீர் நாயக் வெளிநாட்டில் இருப்பதால் அவரைக் கைது செய்ய இயலவில்லை. நேரில் ஆஜராகுமாறு பல முறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், அவர் நேரில் ஆஜராகவில்லை.
ஜாகீர் நாயக்கின் நெருங்கிய சகாவான அமீர் அப்துல் எம்.கஸ்தாரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் ஜாகீர் நாயக் ஆற்றும் உரைகள் மூலம் திரட்டப்படும் நிதியானது, சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, ஜாகீர் நாயக்கின் ரூ.18.37 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை திங்கள்கிழமை முடக்கியுள்ளது.
அவற்றில் ரூ.9.41 கோடி மதிப்பிலான பரஸ்பர நிதி, இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் பெயரில் 5 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.23 கோடி, சென்னையில் உள்ள அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.7.05 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.68 லட்சம் மதிப்பிலான ஒரு கிடங்கு ஆகியவை அடங்கும்.
மீண்டும் அழைப்பாணை: இதனிடையே, தேசிய புலனாய்வு அமைப்பு முன் வரும் 30-ஆம் தேதி ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்கிற்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com