சீலிங் பேனில் ஸ்ப்ரிங், சைரன் சென்சார்: மாணவர் தற்கொலையை தடுக்க கோதாவில் குதிக்கிறது கோட்டா!  

நாட்டிலேயே மாணவர் தற்கொலைகளின் தலைநகராக விளங்கும் ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில், அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க ...
சீலிங் பேனில் ஸ்ப்ரிங், சைரன் சென்சார்: மாணவர் தற்கொலையை தடுக்க கோதாவில் குதிக்கிறது கோட்டா!  

கோட்டா: நாட்டிலேயே மாணவர் தற்கொலைகளின் தலைநகராக விளங்கும் ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில், அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜஸ்தானின் உள்ள சிறிய நகரம் கோட்டா. மிகச் சிறிய நகரமான இது இந்திய அளவில் ஐஐடி / ஜேஈஈ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களின் தலைநகரமாக விளங்குகிறது. இங்கே திரும்பும் பக்கமெல்லாம் பயிற்சி மையங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அந்த அளவில் இது புகழ்பெற்றதாக விளங்குகிறது.ஆனால் சமீப காலமாக இங்கே மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. 

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இங்கு குவியும் மாணவர்கள், தொடர் தேர்வுகள் மற்றும் படிப்புச் சுமை தாளாமல், அதிகப்படியான மன அழுத்தத்தின்  காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2014-ஆம் ஆண்டு அறிக்கையின்படி 45 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

பெரும்பாலான  மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதி அறையின் சீலிங் பேனில் தூக்கிட்டே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த கவலையூட்டும் தொடர் சம்பவங்களினால் அதிர்ச்சியான 'கோட்டா விடுதி உரிமையாளர்கள் சங்கம்' என்னும் அமைப்பின் நிர்வாகிகள் ஒரு அவசர முடிவெடுத்துள்ளனர். அதன்படி இனி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளிலுள்ள சீலிங் பேன்களில் ரகசிய ஸ்ப்ரிங் மற்றும் சைரன் சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக கோட்டா விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான நவீன் மிட்டல் கூறியதாவது:

விடுதி அறைகளிலுள்ள சீலிங் பேன்களில் இணைக்கப்பட உள்ள ரகசிய ஸ்பிரிங்கானது அதிக பட்சமாக 20 கிலோ எடை வரைதான் தாங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் எடையுள்ள யாராவது அதிலிருந்து தொங்க முயன்றால், தானாக கீழே இறங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அந்த ரகசிய சைரனானது உடனடியாக ஒலி எழுப்பி விடுதி உரிமையாளர்களை எச்சரிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே போல விடுதியில் மாணவர்களது இருப்பை உறுதி செய்யும் விதமாக 'பயோமெட்ரிக் வருகைப்பதிவு' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலானது  உடனுக்குடன் மாணவர்களது பெற்றோர்கள், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் அலைபேசி தகவல் வாயிலாக உடனுக்குடன் தகவல் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.   

இவ்வாறு நவீன் மிட்டல் தெரிவித்தார். இந்த அமைப்பின் நிறுவன தலைவரான மனிஷ் ஜெயின் கூறும் பொழுது இவை தவிர கண்காணிப்பு கேமராக்கள் மாணவர்களின் பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் முக்கியமான கோணங்களில் பொருத்தபட உள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com