தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் லட்சக்கணக்கான வாகனங்கள்! இபிசிஏ ஆய்வில் தகவல்

தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குவதாக, சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் லட்சக்கணக்கான வாகனங்கள்! இபிசிஏ ஆய்வில் தகவல்

தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குவதாக, சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியில் வாகனங்களின் புகையை சோதித்து, அவற்றுக்கு மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்காக, சுமார் 971 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லை.

மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள்-1989இன்படி, பிஎஸ்-3 வகை வாகனங்கள் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒரு முறையும், பிஎஸ்-4 வகை வாகனங்கள் ஓராண்டுக்கு ஒருமுறையும் புகை பரிசோதனைக்கு உட்பட்டு, மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும்.

தில்லியில் இயங்கும் பிஎஸ்-3 வாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை சுமார் 59 லட்சம் வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்பட வேண்டும். ஆனால், கள நிலவரமோ வேறுமாதிரியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிகழாண்டு ஜனவரி வரை (3 மாதங்கள்) சுமார் 13.7 லட்சம் வாகனங்களே மாசுக் கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்பட்டுள்ளன. இதன்மூலம், தில்லியில் சுமார் 23 சதவீத வாகனங்களே முறையான மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

லட்சக்கணக்கான வாகனங்கள் சரியான மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வருகின்றன. அதுபோன்ற வாகனங்கள் மீது மோட்டார் வாகனங்கள் சட்டப் பிரிவு 190-இன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படும் வாகனங்களில், பெரும்பாலும் அனைத்து வாகனங்களுக்குமே சான்றிதழ் வழங்கப்பட்டு விடுகிறது. சோதனையில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. இந்த நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள மாசு கட்டுப்பாட்டு சோதனை விதிகள் வலுவில்லாமல் இருக்கின்றன. அவற்றை கடுமையாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com