குஜராத்தில் பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் சொந்த மண்ணான குஜராத்தில் பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கையசைக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
குஜராத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கையசைக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

பிரதமர் மோடியின் சொந்த மண்ணான குஜராத்தில் பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் மனக்குரலுக்கு மதிப்பளிப்போம் என்றும், எங்களது மனதில் தோன்றியதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றி வருதை விமர்சிக்கும் வகையில் இக்கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ராகுல் காந்தி அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியைக் கருத்தில் கொண்டு, கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாகவே, அவரது குஜராத் பயணமும் கருதப்படுகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்துக்கு திங்கள்கிழமை சென்ற ராகுல் காந்தி, தெதியபதா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. மாநிலத்தில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு பெருவாரியான மக்களின் கூட்டு முயற்சி அவசியம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசு அனைவருக்குமானதாக இருக்கும். எந்தவொரு தனிநபருக்கு சாதகமாகவும் காங்கிரஸ் செயல்படாது.
மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு நாங்கள் செயலாற்றுவோம். மாறாக எங்களது மனதில் தோன்றியதை எல்லாம் மக்களிடம் திணிக்க மாட்டோம். குஜராத் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முழு வலிமையுடன் காங்கிரஸ் கட்சி போராடும். பிரதமர் மோடியின் சொந்த மண்ணிலேயே பாஜகவை வீழ்த்துவோம் என்றார் அவர்.
முன்னதாக, தலித் மக்களின் தெய்வமாகப் போற்றப்படும் பண்டூரி மாதா கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி வழிபட்டார். அதன் பிறகே பொதுக்கூட்டத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வந்துகொண்டிருந்தபோது, அவர்களது வேன் தாபி மாவட்டம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com