சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்ட துறவி ராமானுஜர்: பிரதமர் மோடி

ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஆகிய சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்ட துறவி ராமானுஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ராமானுஜாச்சார்யரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி தில்லியில் திங்கள்கிழமை தமது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் ராமானுஜர் நினைவு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி.
ராமானுஜாச்சார்யரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி தில்லியில் திங்கள்கிழமை தமது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் ராமானுஜர் நினைவு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி.

ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஆகிய சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்ட துறவி ராமானுஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ராமானுஜாச்சார்யரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது, அவரது உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
மாபெரும் சமூக சீர்திருத்தவாதியும் துறவியுமான ராமானுஜாச்சார்யரின் ஆயிரமாவது பிறந்த நாள் கொண்டாட்ட அஞ்சல் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
துறவி ராமானுஜாச்சார்யரின் வாழ்க்கைத் தத்துவமே அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம், மதப் பணி மற்றும் வேதாந்தம் ஆகும். இறைவனில் மனிதனையும் மனிதர்களில் இறைவனையும் கண்ட மகான் அவர். இறைவனின் பக்தர்கள் அனைவரையும் சரிசமமானவர்களாக அவர் கண்டார்.
ஜாதிப் பாகுபாடும் அதிகார அடுக்கு அமைப்பும் சமுதாயம் மற்றும் மதத்தின் உள்ளார்ந்த அம்சங்களாக அங்கீகரிக்கப்பட்டபின், ஒவ்வொருவரும் இந்த அதிகார அடுக்கில் மேலும் கீழுமாக அமையத் தொடங்கினர். இதை துறவி ராமானுஜாச்சார்யர் தனது வாழ்க்கைமுறையாலும் மத போதனைகளாலும் கடுமையாக எதிர்த்தார்.
இதனால்தான் சுவாமி விவேகானந்தர், துறவி ராமானுஜாச்சார்யரை இதயத்தில் இருந்து பேசியவர் என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அழுத பெரிய இதயம் என்றும் போற்றினார். அந்தக் காலகட்டத்தில் ஒருவர் ஒடுக்கப்பட்டவர் என்றால் அது அவரவர் விதிப்பயன் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருந்தது. இதனை ராமானுஜர் உடைத்தெறிந்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒடுக்கப்பட்டவர்களின் மறைக்கப்பட்ட மனக்குமுறல்களையும் சொல்லொண்ணா விருப்பங்களையும் அவர் உணர்ந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, சாதியில் இருந்து விலக்கப்பட்ட மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மதத்தினுள் மட்டுமன்றி சமூகத்தினுள்ளும் சேர்க்க வேண்டும் என்று கருதினார்.
ஏழைகளின் தேவைகளை சமூகப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். உதாரணத்துக்கு மேல்கோட்டை என்ற இடத்திற்கு அருகே தொண்டனூர் என்ற இடத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் செயற்கை ஏரியை அவர் ஏற்படுத்தினார். இந்த ஏரி இன்றும் துறவி ராமானுஜாச்சார்யரின் மக்கள் நலப் பணிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இன்றும் இந்த ஏரி 70க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளை சமாளிக்கிறது. ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அவர் கடவுளாக தென்பட்டார். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதை அவர் முற்றிலுமாக மாற்றினார். நிர்வாகத்தின் பிரிவுகளை அவர் ஒவ்வொரு வகுப்பினருக்கும் வழங்கினார். பெண்களுக்கும் நிர்வாகத்தில் இடம் அளிக்கப்பட்டது. மக்கள் சேவையும் இதில் இடம் பெற்றிருந்தது.
ஏழைகளுக்கு உணவு, மருந்து, உடை மற்றும் தங்குவதற்கு இடம் ஆகியவற்றை வழங்கும் விதமாக ராமானுஜாச்சாரியர் ஸ்ரீரங்கம் கோவிலின் செயல்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஜாதீய வாழ்க்கை முறைக்கு ஒரு சவாலாக தனது வாழ்க்கையை அவர் வாழ்ந்துகாட்டினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையே அவர் விழிப்புணர்வைக் கொண்டு வந்ததுடன், சமூகத்தில் சீர்திருத்தங்களையும் கொண்டுவர பாடுபட்டார்.
இதனால் தான் அவரை அனைத்து சமுதாயத்தையும், ஜாதியையும் சேர்ந்தவர்கள் போற்றினர். பலருக்கு தெரியாத விஷயம் ஒன்றை தெரிவிக்கிறேன். துறவி ராமானுஜாச்சாரியர் ஸ்ரீரங்கம் கோவிலில் இஸ்லாமிய தில்லி இளவரசி பீவி நாச்சியார் சிலையை நிறுவினார்.
இங்கே குழுமியுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். 2022}ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 75}ஆம் ஆண்டில் நுழையும் போது, நம்மை பின்னோக்கி இழுக்கும் நம் பலவீனங்களுக்கு எதிராக நாம் போராடுவதுடன், அடைய வேண்டிய இலக்குகளையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபடவேண்டும் என்றார் பிரதமர் மோடி.
இந்நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால் சாமி, எம்.பி.க்கள் பி. வேணுகோபால், கே.என். ராமச்சந்திரன், வி. ஏழுமலை, இல. கணேசன், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், துறை ஆணையர் மா.வீர. சண்முகமணி, இந்து மிஷன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com