பிரதமர் மோடி - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு: பயங்கரவாதத்தை ஒழிக்க சூளுரை

இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் ரீசிப் தாயீப் எர்டோகனை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, துருக்கி அதிபர் எர்டோகன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், துருக்கி அமைச்சர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, துருக்கி அதிபர் எர்டோகன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், துருக்கி அமைச்சர்.

இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் ரீசிப் தாயீப் எர்டோகனை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
இருநாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த எர்டோகன், தில்லியில் பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மோடி கூறியதாவது:
நமது சமூகம் இப்போது பல்வேறு புதிய அச்சுறுத்தல்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் நாடுகளின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகள் மூலம் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் நான் பேசினேன். பயங்கரவாதத்தை எந்தக் காரணத்துக்காகவும் யாரும் ஆதரிக்கக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.
பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு நாடுகளில் இருந்து வேறு சில நாடுகளைக் குறிவைத்து செயல்படும் நிலை உள்ளது. பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க முதலில் அவர்களின் நிதிப்பரிமாற்றத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், துருக்கியும் இணைந்து செயல்படவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உறுதி எடுத்துள்ளோம் என்றார் அவர்.
துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் துருக்கி எப்போதும் இந்தியாவுக்கு துணை நிற்கும்.
இந்தியாவில் 25 பாதுகாப்புப் படை வீரர்கள் நக்ஸலைட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, நரேந்திர மோடியும், எர்டோகனும் இந்திய - துருக்கி வர்த்தக ஒத்துழைப்புக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, இரு நாடுகளிடையே வர்த்தக, தொழில் உறவுகளை மேம்படுத்த உறுதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் எரிசக்தி, ரயில், சாலை, துறைமுகம், வீடுகளின் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் துருக்கி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு விடுத்தார்.
அவர் பேசியதாவது: "இந்தியாவும், துருக்கியும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடியும். முதலீட்டுக்கு பாதுகாப்பான, உகந்த இடமாக துருக்கி உள்ளது. எனவே, இந்தியத் தொழிலதிபர்கள் துருக்கியில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார் மோடி.
ஐ.நா.வில் இந்தியாவுக்கு ஆதரவு: தில்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற எர்டோகன் பேசியதாவது: இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்கப்படவில்லை. 170 கோடி மக்கள் உள்ள இஸ்லாமிய உலகத்துக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடமில்லை. இது பாரபட்சமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக துருக்கி ஆதரவளிக்கும். ஐ.நா.வில் சீர்திருத்தங்கள் தேவை என்றார். முன்னதாக, தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ் காட்டில் எர்டோகன் அஞ்சலி செலுத்தினர்.
எர்டோகன் பேட்டியால் சர்ச்சை: முன்னதாக இந்திய வருகையையொட்டி, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எர்டோகன், "காஷ்மீரில் இனி மேலும் ரத்தம் சிந்த அனுமதிக்க மாட்டோம். பலதரப்பு பேச்சுவார்த்தை முலம் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும். காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமென விரும்புகிறோம்' என்றார்.
"ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலானது. இதில் மூன்றாவது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை' என்பது இந்தியாவில் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க பலதரப்பு பேச்சு நடத்த வேண்டுமென்று எர்டோகன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில், "காஷ்மீர் பிரச்னையில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து துருக்கி அரசுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com