நிர்பயா வழக்கு: நால்வருக்கும் தூக்கு தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தில்லியில் துணை மருத்துவ மாணவி 'நிர்பயா' (பெயர் மாற்றப்பட்டது) கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் (29), பவன் (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய
நிர்பயா வழக்கு: நால்வருக்கும் தூக்கு தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தில்லியில் துணை மருத்துவ மாணவி 'நிர்பயா' (பெயர் மாற்றப்பட்டது) கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் (29), பவன் (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.
இரு தீர்ப்புகள்: 2012, டிசம்பர் 16-இல் நடைபெற்ற 'நிர்பயா' சம்பவம் தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இதில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் தனியாகவும், நீதிபதி ஆர்.பானுமதி தனியாகவும் தீர்ப்பு எழுதினர்.
இரு நீதிபதிகள் தீர்ப்பு: இந்த வழக்கு தொடர்புடைய குற்றச் செயல், தனி நபர் மீதான நம்பிக்கை மட்டுமின்றி சமூக நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. எனவே 'அரிதினும் அரிதான குற்றம்' என்ற வகையில் நால்வரின் குற்றச் செயல், தூக்குத் தண்டனைக்கு வழிவகுத்துள்ளது. பாதிக்கப்பட்ட 'நிர்பயா' அளித்த மரண வாக்குமூலம் குற்றம் நடந்ததை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. குற்றச் செயலில் குற்றவாளிகளுக்கு இருந்த தொடர்பு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட 'டிஎன்ஏ' (மரபணு) போன்ற அறிவியல் ரீதியிலான பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
போதுமான ஆதாரம்: தண்டனை வழங்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகள், சிறார் ஆகியோரின் குற்றச்சதி நிரூபிக்கப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பர் மீது பேருந்தை ஏற்றிக் கொல்ல முற்பட்டு ஆதாரங்களை அழிக்கும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளும் தெளிவாக போலீஸ் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பின் முதலாவது சாட்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த அவரது நண்பரின் சாட்சியம் ஒன்றே குற்றவாளிகளின் செயலை நிரூபிக்கப் போதுமானது.
பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் அவரை 'மகிழ்வுப் பொருள்' ஆகக் கருதி மிகவும் கொடூரமாகத் தாக்கி, உள்ளுறுப்புகளையும் குற்றவாளிகள் சேதப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு அனுதாபம் காட்டினால் அது நிர்வாகம், நீதித் துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்த்து விடும். குற்றவாளிகளின் செயல், சுனாமி ஆழிப் பேரலை ஏற்படுத்தியதை விட மிகவும் மோசமான அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. எனவே, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாமல் உறுதி செய்கிறோம் என தீர்ப்பில் இரு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதிபதி பானுமதி தீர்ப்பு: இந்த வழக்கில் நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பு வருமாறு: தனிப்பட்ட சுதந்திரம், சுயமரியாதை, நேர்மை பெருமை ஆகியவை பெண்களுக்கு முக்கியம். ஒவ்வொருவரின் முன்னேற்றத்தை சார்ந்தே சமூக முன்னேற்றம் அமைகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள், தண்டனைகள் மட்டும் பயன் அளிக்காது. கலாசாரம் அடிப்படையிலான சமூகத்தில் பெண்களை மரியாதையுடன் நடத்தவும், பாலின நீதியை உறுதிப்படுத்தவும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே பெண்களை மதிக்க கற்றுத் தர வேண்டும். இதுபோன்ற கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் சமூக மனசாட்சியை உலுக்கியது மட்டுமின்றி, நாகரிகம் அடைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. மேலும், சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒருவித பாதுகாப்பு இல்லாத உணர்வை உருவாக்கியுள்ளது.
அறிவுரை: இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம், மக்கள் இயக்கத்தின் கண்களைத் திறப்பதாக அமைந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டி, பெண்களையும், அவர்களின் கண்ணியத்தையும் மதிப்பதாக இருக்கட்டும். 'அரிதினும் அரிதான குற்றச் செயல்' ஆக இந்த வழக்கின் குற்றவாளிகளின் செயலை கருதாவிட்டால் வேறு எந்த வழக்கை அவ்வாறு கருத முடியும்? குற்றவாளிகளின் வயது, குற்றப் பின்னணி இல்லாத நிலை, சிறையில் நன்னடத்தை போன்றவற்றை வைத்து அவர்களின் குற்றச் செயல் தீவிரமானது அல்ல என்று கூறிவிட முடியாது.
இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்காவிட்டால் சமூகத்துக்கு நீதிமன்றங்கள் அநீதி இழைத்தது போல ஆகிவிடும். சட்டங்களை அமல்படுத்தி அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே பாலின நீதிக்கான போராட்டத்தில் வெற்றி காண முடியும். அதற்கு இந்தச் சம்பவம் வழிகோலட்டும்' என நீதிபதி பானுமதி கூறியுள்ளார்.

நீதி கிடைத்துள்ளது


தில்லி துணை மருத்துவ மாணவி 'நிர்பயா' (பெயர் மாற்றப்பட்டது) கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்த மாணவியின் பெற்றோர் வரவேற்றுள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, தந்தை பி.என். சிங் ஆகியோர் தங்களது வழக்குரைஞர்களுடன் வந்திருந்தனர்.
நிர்பயாவின் பெற்றோர் அளித்த பேட்டி: இந்தத் தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரும் விரைவில் தூக்கு கயிற்றில் ஏற்றப்படுவார்கள் என்று நம்புகிறோம். 'நிர்பயா' வழக்கில் நீதி கிடைத்துள்ளது. இது ஒரு மைல் கல் தீர்ப்பு. எங்கள் வலியை, நாங்கள் பட்ட துயரை நீதிமன்றம் உணர்ந்திருப்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. இந்தத் தீர்ப்பு எங்களுக்கானது மட்டுமல்ல. இந்தத் தேசம் முழுவதற்குமானது என்றனர்.

மறுஆய்வு மனு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்குரைஞர் ஏ.பி. சிங் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. தீர்ப்பின் அம்சங்களை முழுமையாகப் படித்த பிறகு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும். நாட்டுக்கு செய்தி சொல்வதாகக் கூறி எவருக்கும் தூக்கு தண்டனையை விதித்து விட முடியாது. அனைவருக்கும் வாழ உரிமை உண்டு. இந்த வழக்கில் மனித உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன' என்றார்.

இந்தியாவின் துணிச்சல் மிக்க மகளின் ஊக்கமிக்க குடும்பத்தினருக்காக ஆழமாக உணர்கிறேன். பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்களின் போராட்ட அடையாளமாக 'நிர்பயா' உருவெடுத்துள்ளார். பெண்களின் உயிர், உடைமைக்கான ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க ஓய்வின்றி நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நினைவூட்டுகிறது. கண்ணியம், கௌரவம், மரியாதை, சமத்துவம் மிக்க வாழ்க்கையை வாழ இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் உரிமை உள்ளது. அதை உறுதிப்படுத்துவது நமது கடமை.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி


இந்தத் தீர்ப்பு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்கில் தூக்குத் தண்டனை விதிப்பது அவசியம். தற்போதைய தீர்ப்பானது சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்களிடம் ஆதங்கமும், கோபமும் இருந்தது. துணிச்சலான பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவமானகரமானது. தவறிழைக்கும் நபர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
- மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

வழக்கு கடந்து வந்த பாதை...

2012
டிசம்பர் 16: 17 வயது சிறார் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் 'நிர்பயா'வை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது.
டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் துணை மருத்துவ மாணவி 'நிர்பயா' உயிரிழப்பு.
2013
மார்ச் 11: பிரதான குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை.
ஆகஸ்ட் 31: சிறாரை மூன்று ஆண்டுகள் காப்பகத்தில் வைக்க உத்தரவு.
செப்டம்பர் 13: நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
2014
மார்ச் 13: தண்டனையை உறுதிப்படுத்தியது உயர் நீதிமன்றம்.
மார்ச் 15: தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை.
2015
டிசம்பர் 18: சிறார் விடுதலைக்குத் தடை விதிக்க தில்லி உயர் நீதின்றம் மறுப்பு.
2016
ஏப்ரல் 3: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.
செப்டம்பர் 2: குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதம் நிறைவு
செப்டம்பர் 16: டிஐஜி சாயா சர்மா ஆஜர்.
2017
பிப்ரவரி 3: தண்டனை அம்சத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு.
மார்ச் 6: கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்
மே 5: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com