டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பெண் நீதிபதிக்கு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ்
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பெண் நீதிபதிக்கு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்குமாறு பெண் நீதிபதிக்கு தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை குற்றப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கில் கைதான டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நரேஷ் (எ) நாது சிங் ஆகியோரை வரும் 15-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, அவரையும் வரும் 12-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து அனைவரும் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரை கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நாளில் பெண் நீதிபதி பூணம் சௌத்ரிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் தன்னை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரது தனிச்செயலர் அனுமந்த் பிரசாத் என அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் நீதிபதி அறிவுரையின்படி சுகேஷை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கூறியுள்ளார்.
ஆனால், அத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது என நீதிபதி பூஷண் சௌத்ரி கூறியதாகவும் அதற்கு தொலைபேசியில் பேசிய நபர், 'ஜாமீன் வழங்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' எனவும் எச்சரித்து இணைப்பைத் துண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த நீதிபதி பூணம் சௌத்ரி தொலைபேசியில் பேசிய நபர் குறிப்பிட்ட நீதிபதியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து அந்த நீதிபதிக்கு ஹனுமந்த் பிரசாத் என்ற பெயரில் தனிச்செயலர் எவரும் இல்லை எனத் தெரிய வந்தது. மேலும், குறிப்பிட்ட நீதிபதி தனக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து தீஸ் ஹசாரி பெருநநகர குற்றவியல் நடுவர்மன்ற முதன்மை நீதிபதி அறிவுரையின்படி தில்லி காவல்துறையிடம் நீதிபதி பூணம் சௌத்ரி புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் நீதிபதிக்கு வந்த தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com