புத்த மத திருவிழாவில் கலந்து கொள்ள 2 நாள் இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட்

புத்த மத திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இலங்கை செல்லவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது
புத்த மத திருவிழாவில் கலந்து கொள்ள 2 நாள் இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட்

புதுதில்லி: புத்த மத திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இலங்கை செல்லவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன் என்றும், கொழும்புவில் நடக்கவிருக்கும் வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன் என்று டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தெரிவித்துள்ளார்.

புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வெசாக்’ (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ஆம் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது.

இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த விழாவில் இலங்கை தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தனது பயணத்தின்போது, தேயிலைக்கு புகழ்பெற்ற இலங்கையின் மத்திய மாகாணமான கண்டிக்கும் மோடி செல்கிறார். தோட்ட தொழிலாளர்களுக்காக இந்தியாவின் ரூ.150 கோடி நிதி உதவியுடன் திக்கோயா என்ற இடத்தில் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை மோடி திறந்து வைக்கிறார்.

கண்டி நகரில் உள்ள அதிபர் மாளிகையில், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடிக்கு நாளை மதிய விருந்து அளிக்கிறார்.

தமிழர் முன்னேற்ற கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

தனது சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது (தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள்) குறித்து இலங்கை தலைவர்களுடன் பிரதமர் அலுவலக ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டாலும், இரு நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடன் இவை குறித்து அவர் உரையாட வாய்ப்பு இருக்கிறது.

அண்மையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து மோடி இன்று இலங்கை செல்கிறார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com