இலங்கை சென்றார் பிரதமர் மோடி: சுட்டுரையில் தமிழில் பதிவிட்டார்

இலங்கையில் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகர் கொழும்புக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் செல்லும் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (இடமிருந்து 4-ஆவது)
இலங்கை தலைநகர் கொழும்புக்கு வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் செல்லும் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (இடமிருந்து 4-ஆவது)

இலங்கையில் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகர் கொழும்புக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.
புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மறைவு ஆகிய மூன்று நிகழ்வுகளைக் குறிக்கும் விசாக தினக் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில் இலங்கை அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு கொழும்பில் வெள்ளிக்கிழமை (மே 12) நடைபெறும் நிகழ்வில் உலகத் தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள், 400-க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இலங்கைக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார். இந்த விழாவில் பங்கேற்பதுடன் அந்நாட்டில் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமும் மேற்கொள்ளவுள்ளார்.
இதையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட மோடி, "இலங்கையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; இங்கு விசாக தினக் கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கவுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் கோயிலில் மோடி வழிபாடு: இதையடுத்து, கொழும்பில் சீம மலாக்கா பகுதியில் உள்ள புராதன சிறப்புமிக்க கங்கராயம்மா புத்தர் கோயிலுக்குச் சென்று மோடி வழிபட்டார். பின்னர், விசாகக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அங்கு நடைபெற்ற பிரசித்தி பெற்ற விளக்குகள் ஏற்றும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, இந்தியாவின் உதவியுடன் அங்கு கட்டப்பட்டிருக்கும் டிக்கோயா மருத்துவமனையை திறந்து வைப்பது, இந்திய வம்சாவளி தமிழர்களுடன் கலந்துரையாடுவது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அவரது இலங்கைப் பயண நிகழ்வுகளை "நரேந்திர மோடி மொபைல் ஆப்' என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் நேரலையாக காண பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழில் பதிவு: முன்னதாக, இலங்கைப் பயணத்துக்கு முன்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் மோடி தமிழில் பதிவிட்டிருந்தார். அதில், "இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இந்தப் பயணத்தின்போது விசாக தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்' என அவர் தெரிவித்திருந்தார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே கையெழுத்து - ராஜபட்ச குற்றச்சாட்டு: இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாகவே இந்தியா - இலங்கை இடையேயான சர்ச்சைக்குரிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு விட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com