உத்தரகண்டில் 4 புனித தலங்களை இணைக்கும் ரயில் திட்டம்: நாளை அடிக்கல் நாட்டு விழா

உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் கேதார்நாத் உள்ளிட்ட "சார்தாம்' எனப்படும் நான்கு புனித தலங்களுக்கு ரயில்வே பாதை

புது தில்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் கேதார்நாத் உள்ளிட்ட "சார்தாம்' எனப்படும் நான்கு புனித தலங்களுக்கு ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை ரயில்வே துறை தொடங்கவுள்ளது. இதற்கான இறுதி ஆய்வு தொடக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இறுதி தல ஆய்வுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்நிகழ்வில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்துக்களின் புனித யாத்திரைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது "சார்தாம்' யாத்திரை. அதாவது, உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் (சிவன் கோயில்), பத்ரிநாத் (விஷ்ணு கோயில்), கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தலங்கள் "சார்தாம்' என அழைக்கப்படுகிறது.

இந்த யாத்திரையை மேற்கொள்வதால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், ஆண்டுதோறும் ஏராளமானோர் நாட்டின் பல பகுதிகளில் இருந்து "சார் தாம்' யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். இப்பிரசித்தி பெற்ற நான்கு தலங்களுக்கும் யாத்ரீகர்கள் அதிகளவில் சென்று வருவதன் காரணமாகவும் இத்தலங்களின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகவும் "சார்தாம்' பகுதிகளுக்கு ரயில் இணைப்பு வசதியை ஏற்படுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம்.

இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் "சார் தாம்' பகுதிகளுக்கு ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை ரயில்வே துறை விரைவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து, ஒற்றை அகல ரயில் பாதைக்கான இறுதி தல ஆய்வை தொடங்குவதற்கான  நடவடிக்கையை முனைப்பாக மேற்கொண்டுள்ளது. இதற்காக 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.120.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனம் இதற்கான பணியைத் தொடங்க உள்ளது.

டேராடூன், கர்ணப் பிரயாகை வழியாக கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் பகுதிகளுக்கு இமயமலையின் நிலப்பகுதி, மலைப் பகுதிகள் வழியாக இந்த ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. சுமை, கொள்திறன், பாதுகாப்பு, வேகம் ஆகியவை தொடர்பான பல்வேறு சவால்களுடன் நிறைந்ததாக இப்பணி இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com