'ரேன்சம்வேர்' வைரஸ் பின்னணியில் வடகொரியா: இந்திய வம்சாவளி பொறியாளர் கண்டுபிடிப்பு

ரேன்சம்வேர்' கணினி வைரஸ் தாக்குதலில் வட கொரியாவுக்கு தொடர்பு இருப்பதை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பொறியாளர் நீல் மேத்தா கண்டுபிடித்துள்ளார்.
'ரேன்சம்வேர்' வைரஸ் பின்னணியில் வடகொரியா: இந்திய வம்சாவளி பொறியாளர் கண்டுபிடிப்பு

ரேன்சம்வேர்' கணினி வைரஸ் தாக்குதலில் வட கொரியாவுக்கு தொடர்பு இருப்பதை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பொறியாளர் நீல் மேத்தா கண்டுபிடித்துள்ளார். கடந்த சில நாள்களாக சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 'ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதலால் பல்வேறு கணினி செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்த வைரஸை ஏவி விட்டது யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வட கொரியாவுக்கு ஆதரவாக செயல்படும் லாசரஸ் இணையவழி ஊடுருவல் கும்பல் இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக அந்த வைரஸில் இருந்து பெறப்பட்ட சில நிரல் தொடர்களை நீல் மேத்தா வெளியிட்டுள்ளார். இது லாசரஸ் இணைய ஊடுருவல் கும்பலால் பயன்படுத்தப்படுவதாகும். ஏனெனில், இதற்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியபோதும், கடந்த ஆண்டு வங்கதேச மத்திய வங்கி கணினிகளுக்குள் ஊடுருவியபோதும் இதேபோன்ற நிரல் தொடர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே வடகொரியாவைச் சேர்ந்த லாசரஸ் இணைய ஊடுருவல் குழுவினர்தான் இதில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வடகொரியாவின் லாசரஸ் இணைய ஊடுருவல் குழுவிடம் இருந்து தகவல்களைத் திருடி புதிய கும்பல் ஒன்று இந்த வைரஸை ஊருவாக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. தங்களை கண்டிபிடிக்க முயற்சிப்பவர்களை குழப்புவதற்காக இந்த தந்திரத்தை வைரஸ் கும்பல் கையாண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 'ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு பணம் கேட்டு வரும் மிரட்டல் வாசகங்கள் அனைத்தும் நேரடியாக ஆங்கிலத்தில் ஊருவாக்கப்படவில்லை என்றும், வேறு மொழியில் இருந்து கணினி மூலம் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸின் நிரல் தொடர்கள் சீன பிராந்திய நேர அட்டவணையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சீனாவும் இந்த வைரஸ் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணம் பறிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுதான் 'ரேன்சம்வேர்' வைரஸைப் பரப்பியுள்ளனர். இதுவரை சுமார் 2 லட்சம் கணினிகள் இதனால் பாதிப்படைந்துள்ளன. ஆனால், வைரஸை ஏவியவர்களால் ரூ.38.5 லட்சம் வரைதான் பெற முடிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com