ஆடியோ டேப்களை திருடினார் அர்னாப் கோஸ்வாமி: 'பகீர்' புகார் அளித்த பிரபல செய்தி நிறுவனம்!

தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடியோ டேப்களை அபகரித்து அறிவுத் திருட்டில் அர்னாப் கோஸ்வாமி  ஈடுபட்டுள்ளார் ...
ஆடியோ டேப்களை திருடினார் அர்னாப் கோஸ்வாமி: 'பகீர்' புகார் அளித்த பிரபல செய்தி நிறுவனம்!

மும்பை: தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடியோ டேப்களை அபகரித்து அறிவுத் திருட்டில் அர்னாப் கோஸ்வாமி  ஈடுபட்டுள்ளார் என்று இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பென்னட் கால்மன் அன்ட் கம்பெனி மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

பென்னட் கால்மன் அன்ட் கம்பெனி இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் கீழ் பிரபல ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் ஆங்கில செய்தி சேனல்கள் வெளிவருகின்றன.அபப்டியான ஒரு சேனலான 'டைம்ஸ் நவ்' வில் முதனமை செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் அர்னாப் கோஸ்வாமி. அவரும் அவரது சக ஊழியரான பிரேமா ஸ்ரீதேவி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு இறுதியில் அங்கிருந்து வெளியேறி, 'ரிபப்ளிக்' என்ற புதிய ஆங்கில செய்தி சேனலை துவக்கினார்.

இந்த புதிய சேனலின் ஒளிபரப்பானது இந்த மாதம் 6-ஆம் தேதி முதல் துவங்கியது. அப்பொழுது பிகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருக்கும் தங்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சஹாபுதீன் உடன் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானது.

அதேபோல அடுத்த இரண்டு நாட்களில் பிரேமா ஸ்ரீதேவி, காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவியும்  தற்பொழுது காலமாகிவிட்டவருமான சுனந்தா புஷ்கர் மற்றும் சுனந்தா இல்ல  வேலையாள் நாராயண் ஆகிய மூவருக்குமிடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானது.

இந்த இரண்டு ஆடியோ பதிவுகளும் சர்ச்சையை கிளம்பியுள்ள நிலையில், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடியோ டேப்களை அபகரித்து அறிவுத் திருட்டில் அர்னாப் கோஸ்வாமி  ஈடுபட்டுள்ளார் என்று பென்னட் கால்மன் அன்ட் கம்பெனி சார்பாக மும்பை ஆசாத் மைதான காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிரேமா ஸ்ரீதேவி ஆகிய இருவரும் 'டைம்ஸ் நவ்'  சேனலில் பணிபுரிந்த பொழுது இந்த ஆடியோ பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இது சட்டப்படி பென்னட் கால்மன் அன்ட் கம்பெனிக்கு (பி.சி.சி.எல்)  சொந்தமானதாகும். தவறு எப்படி நடந்தது என்பது தொடர்பாக  தற்பொழுது உள்ளக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிரேமா ஸ்ரீதேவி ஆகிய இருவர் மீதும் திருட்டு, நம்பிக்கை மீறல் நடவடிக்கை, சொத்துக்களை தவறாக கையாளுதல் மற்றும் பி.சி.சி.எல்லின் அறிவுசார் சொத்துரிமை மீதான இடையீடு ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு தொடர வேண்டும் என்று அந்த  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிரேமா ஸ்ரீதேவி  மீது இந்திய தண்டனை சட்ட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டம்- 2000 பிரிவின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை யும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மும்பை காவல்துறையின் துணை ஆணையர் ரஷ்மி கரண்டிகர் உறுதி செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com