அருண் ஜேட்லி குறித்த ராம் ஜேத்மலானியின் கருத்து அவதூறானது: நீதிமன்றம் கண்டனம்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறித்து மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியின் கருத்து அவதூறானது என்று தில்லி உயர் நீதிமன்றம்

புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறித்து மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியின் கருத்து அவதூறானது என்று தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்துகள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஒப்புதலின்பேரில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவர் நேரடியாக நீதிமன்றத்தின் கூண்டில் ஏறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது ஜேட்லி பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அரவிந்த் கேஜரிவால், அவரது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கேஜரிவால் உள்ளிட்ட அவரது கட்சியினர் 6 பேரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு அருண் ஜேட்லி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், நீதிமன்ற இணைப் பதிவாளர் முன்னிலையில் ஜேட்லியிடம் கேஜரிவாலின் வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி புதன்கிழமை குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஜேத்மலானி பயன்படுத்திய வார்த்தைக்கு ஜேட்லி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, கேஜரிவாலின் ஒப்புதலுடன்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்களா? என்ற துணைப் பதிவாளரின் கேள்விக்கு, "ஆமாம்' என்று ஜேத்மலானி பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அருண் ஜேட்லி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் நாயக், சந்தீப் சேத்தி ஆகியோர் கூறியதாவது:

ஜேத்மலானி கூறியவை கேஜரிவாலின் கருத்துகள்தானா அல்லது ஜேத்மலானியின் சொந்தக் கருத்துகளா? என்பதை அறிய விரும்புகிறோம் என்றனர்.

அப்போது நீதிபதி கூறியதாவது:

குறுக்கு விசாரணையின்போது ஜேட்லி மீது இவ்வளவு மோசமான வார்த்தையை கேஜரிவாலின் வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி பயன்படுத்தியது அவதூறானது, இழிவானது. கேஜரிவால் கூறியதன் மூலம்தான் இந்தக் கருத்துகள் பயன்படுத்தப்பட்டன என்றால், அவர் நேரடியாக நீதிமன்ற கூண்டில் ஏறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com