நினைவிடம் வேண்டாம்; மரம் நடுங்கள் போதும்: அனில் மாதவ் தவேயின் விருப்பம்

நான் இறந்துவிட்டால் எனக்காக நினைவிடம் எழுப்பவேண்டாம், என்னை உண்மையிலேயே விரும்பினால் மரங்களை நடுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார்.
நினைவிடம் வேண்டாம்; மரம் நடுங்கள் போதும்: அனில் மாதவ் தவேயின் விருப்பம்


புது தில்லி: நான் இறந்துவிட்டால் எனக்காக நினைவிடம் எழுப்பவேண்டாம், என்னை உண்மையிலேயே விரும்பினால் மரங்களை நடுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) இதய செயலிழப்பு காரணமாக தில்லியில் நேற்று உயிரிழந்தார்.

அனில் தவேயின் மறைவு அரசியல் வட்டாரத்திலும், பாஜகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக தொடர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து அமைச்சரவைப் பணிகளை உத்வேகத்துடன் அனில் மாதவ் தவே ஆற்றி வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவனைக்கு உதவியாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அனில் மாதவ் தவேவின் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இதயத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மருத்துவர்கள் தீவிரமாக மேற்கொண்டபோதிலும், அவை பலனளிக்கவில்லை. இதையடுத்து காலை 9.45 மணிக்கு அனில் மாதவ் தவே இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வித்தியாசமானவர்... மத்திய அமைச்சர்களிலேயே சற்று வித்தியாசமானவர் என்று பெயர் பெற்றவர் அனில் மாதவ் தவே. சுற்றுச்சூழல் - வனத் துறையை தனது அமைச்சகப் பொறுப்பு என்று மட்டுமே அணுகாமல் அதனை உணர்வுப்பூர்வமாக நேசித்தவர் அவர் என்று பாஜகவினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் கடந்த 1956-ஆம் ஆண்டு எளிமையான குடும்பப் பின்னணியில் பிறந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் கொள்கைகள் மேல் இருந்த ஆத்மார்த்தமான பற்றினால் அந்த அமைப்பில் இணைந்து பணியாற்றினார். இதன் காரணமாக அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை.

பின்னர் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

அனில் மாதவ் தவேக்கு மத்திய சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பதவி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அப்பொறுப்பை அனில் தவே மிகவும் நேசித்து செயல்பட்டதாக அவருக்கு நெருக்காமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹர்ஷவர்தனுக்கு கூடுதல் பொறுப்பு: இதனிடையே, மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மரம் நடுங்கள்! உயிலில் தவே உருக்கம்
'எனது நினைவாக மரம் வளர்த்து பராமரியுங்கள்' என மறைந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தமது உயில் மூலம் பொதுமக்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயில் விவரம்: 'எனது உடலுக்கான இறுதிச் சடங்குகளை மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பாந்த்ராபானில் அமைந்துள்ள நர்மதை நதிக்கரையில் வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் நடத்துங்கள். அவ்வாறு நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் வேத முறைப்படி எளிமையாக இருக்க வேண்டும். எனது நினைவாக நினைவு இல்லம், போட்டி, விருதுகள், சிலைகள் போன்றவற்றை அமைக்க வேண்டாம்.

எனது நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால், மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆறுகளையும், அணைகளையும் பாதுகாக்க போதுமான முயற்சி எடுங்கள். அதற்காக எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்' என தனது உயில் மூலம் தவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com