குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகள்: வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

காணாமல் போகும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

காணாமல் போகும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

காணாமல் போகும் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக "பச்பன் பச்சாவோ அந்தலோன்' எனும் தன்னார்வ அமைப்பு மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2015, ஜனவரி 13-ஆம் தேதி சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

அதில், "காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க மாநிலங்களால் பல செயல்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களின் அரசுகள் செயல்படுத்தி வரும் செயல்பாட்டு வழிமுறைகள்  (எஸ்ஓபி) ஒரு மாதிரியாக தொகுத்து அதை நாடு முழுமைக்குமான சீரான வழிமுறையாக பின்பற்ற வேண்டும்' உச்ச நீதிமன்றம் கூறியது.

இதன்படி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் செயல்பாட்டு வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அத்துறை உயரதிகாரி கூறியதாவது:
காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள், சிறார் நீதி (குழந்தைகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு) மாதிரி விதிகளுடன் ஒத்துப்போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பது, அவர்களை மீட்ட பிறகு மறுவாழ்வுப் பணிகளை வழங்குவது போன்றவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் தொடர்புடைய காவல் துறை, குழந்தைகள் நலக் குழுக்கள், சிறார் நீதி குழுமம் ஆகியவற்றின் பங்களிப்பு, பொறுப்புகள் குறித்தும் வழிமுறை குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

சிறார் நீதி (குழந்தைகளுக்கான கவனிப்பு, பாதுகாப்பு) மாதிரி விதிகள் 2016-இன் விதி 92(1)-இன்படி "காணாமல் போகும் குழந்தை' என்பது அந்தக் குழந்தையின் இருப்பிடம் பற்றி அதன் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர், அல்லது எந்த ஒரு நபர், சட்டப்பூர்வமாக குழந்தையைப் பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட நிறுவனம் ஆகியோருக்கு தெரியாமல் இருப்பதாகும்.

எந்த சூழ்நிலை அல்லது காரணத்தால் குழந்தை காணாமல் போனாலும், அக்குழந்தையின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்படும்வரை, அதற்குத் தேவையான கவனிப்பும், பாதுகாப்பும் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளின் நோக்கமானது, காணாமல் போகும் குழந்தையைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதாகும். காணாமல் போகும் குழந்தைகள் தொடர்புடைய முக்கிய நோக்கங்களின் அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்வது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, குழந்தை பாதிப்பு, குழந்தை பாதுகாப்பு, குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொடர்புடைய துறையினருக்கு விரிவான நடைமுறை வழிமுறைகளை வழங்குவது, குழந்தையின் குடும்பத்தை கண்டுபிடிப்பது, திருப்பி அனுப்புவது, மறுவாழ்வு சமூக மறுஒருங்கிணைப்பு, குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது, விசாரணையை விரைந்து முடிப்பதை உறுதிப்படுத்துவது, காணாமல் போய் மீட்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ஆகியவை உள்ளடங்கும்.

இதேபோல, காணாமல் போகும் குழந்தையைக் கண்டறிவது போலீஸாரின் அடிப்படை  பொறுப்பு. விசாரணை அதிகாரியின் பங்கு குறித்து வழிமுறையில் தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணாமல் போன குழந்தைகள் தொடர்புடைய வழக்குகளின்  விவரம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை காவல் தலைமை  இயக்குநருக்கு அவற்றை பயன்படுத்துவதற்காகவும், பரப்புவதற்காவும் வழங்கப்பட்டுள்ளது என்றார் உயரதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com