ஒடிஸா சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல்

ஒடிஸா சட்டப் பேரவையில் மாநில ஜிஎஸ்டி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஒடிஸா சட்டப் பேரவையில் மாநில ஜிஎஸ்டி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்து அதன் மீதான விவாதத்தை நிதியமைச்சர் எஸ்.பி.பெஹேரா தொடக்கிவைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:
ஒடிஸா சரக்குகள், சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேற்றப்பட்டால் வரி கட்டமைப்பு நிர்வாகம் எளிமைப்படுத்தப்படும். 17 மத்திய, மாநில வரிகளை ஒன்றிணைக்கிறது ஜிஎஸ்டி.
மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் தயாரிக்கப்படும் பொருள்கள் இனி பன்னாட்டுச் சந்தையில் விற்பனையாகும் பொருள்களுடன் போட்டியிட முடியும். ஜிஎஸ்டியால் வரி கட்டமைப்பு விரிவடையும். மேலும் வரி நிர்வாகமும் மேம்படும்.
எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிப்பதுபோல, தனிநபர் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் வரி வளையத்துக்குள் வரமாட்டார்கள். எனவே ஒடிஸா ஜிஎஸ்டி மற்றும் ஒடிஸா வாட் வரி திருத்தம் தொடர்பான இரு மசோதாக்களை நிறைவேற்ற அவை உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பெஹேரா கேட்டுக்கொண்டார்.
ஒப்புதல் பெற வேண்டி அவையில் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ததற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கே.வி.சிங்தேவ்.
ஏழைகளை ஜிஎஸ்டி மசோதா கடுமையாக பாதிக்கும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் ஜிஎஸ்டி சட்ட மசோதாவில் இருக்கும் பல்வேறு உட்பிரிவுகளில் குழப்பம் இருப்பதாகக் கூறி அதை தெளிவுபடுத்தும் நோக்கில் சில திருத்தங்களை எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா கொண்டு வந்தார்.
அப்போது ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள உறுப்பினர் ராணேந்திர பிரதாப் ஸ்வைன், மிஸ்ராவுக்கு ஆதரவாகப் பேசி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.
எனினும் காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களையும் அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரித்ததுடன், மசோதாக்களையும் நிறைவேற்றியது.
தொடர்ந்து பேசிய பிஜு ஜனதாதள தலைமைக் கொறடா அமர் பிரசாத் சத்பதி, நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றியதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் பாராட்டினார்.
இந்த மசோதா தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியவில்லை. எனினும் அதை தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு செய்து காட்டியது. மேலும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதாக மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது என்று சத்பதி சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com