காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஹஃபீஸ் சயீது நிதியுதவி: என்ஐஏ தீவிர விசாரணை

காஷ்மீரில் தொடர் வன்முறையை அரங்கேற்றுவதற்காக பிரிவினைவாதிகளுக்கு மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது நிதியுதவி வழங்கியதாக எழுந்த புகார் குறித்து தேசியப் புலனாய்வு

காஷ்மீரில் தொடர் வன்முறையை அரங்கேற்றுவதற்காக பிரிவினைவாதிகளுக்கு மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது நிதியுதவி வழங்கியதாக எழுந்த புகார் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி கிலானி, காஜி ஜாவேத் பாபா உள்ளிட்டோர் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிவினைவாத முழக்கங்களை முன்வைத்து காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது. பல நேரங்களில் அவை வன்முறையாக வெடிப்பதால், அப்பகுதி முழுவதுமே அசாதாரண சூழல் நீடித்து வருகிறது. இதற்கு நடுவே, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வரும் பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் இருந்தவாறே காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஜம்மு - காஷ்மீரில் வன்முறை சூழலை உருவாக்கும் நோக்கில் இத்தகைய நிதியுதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. காஷ்மீரின் எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள சில வர்த்தகர்களும் இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், அண்மையில் ஸ்ரீநகருக்கு வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கும் பொருட்டு சிலரை தரகர்களாகப் பயன்படுத்தி, அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படுவது விசாரணையில் தெரியவந்தது. அதில் ஒரு பகுதி தரகுத் தொகையாக அவர்களுக்கு வழங்கப்படுவதும், மற்ற தொகை அனைத்தும் பிரிவினைவாதிகளுக்கு போய்ச் சேருவதும் கண்டறியப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், தங்களது வங்கிக் கணக்கில் எவர் பணம் செலுத்துகிறார்கள் என்ற விவரம்கூட சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக என்ஐஏ தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் கிலானியின் மகன் நயீம் கிலானியை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு விசாரித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com