குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: புதிய வழக்குரைஞர்கள் குழுவை அமைக்கிறது பாகிஸ்தான்

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக புதிய வழக்குரைஞர்கள் குழு அமைக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர்

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக புதிய வழக்குரைஞர்கள் குழு அமைக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து உளவு வேலைகளில் ஈடுபட்டதாக அந்நாடு குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி ஜாதவை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஜாதவ் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்று குற்றம்சாட்டியது. மேலும் ஈரானில் இருந்து அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கடத்திச் சென்று உரிய விசாரணை நடத்தாமல் மரண தண்டனை விதித்துவிட்டதாகவும் இந்தியா தெரிவித்தது.
மேலும் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு முறையிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜாதவ் தூக்கிலிடப்படக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
புதிய வழக்குரைஞர்கள் குழு: இதனிடையே, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக புதிய வழக்குரைஞர்கள் குழு அமைக்கப்படும் என சர்தாஜ் அஜீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் அவர் கூறியதாவது:
இந்த வழக்கை பாகிஸ்தான் திறம்படக் கையாளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த வழக்கில் ஆஜரான கவார் குரேஷி பாகிஸ்தானின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் துணிவுடன் எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானின் அடிப்படை இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் முக்கியம் என்றார் சர்தாஜ் அஜீஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com