மாலேகான் மாநகராட்சித் தேர்தல்: பாஜக சார்பில் 27 முஸ்லிம்கள் போட்டி

மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் மாநகராட்சிக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக சார்பில் 27 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் மாநகராட்சிக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக சார்பில் 27 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாசிக் மாவட்டத்திலுள்ள மாலேகான் நகராட்சி, கடந்த 2001-இல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
மாலேகான் மாநகராட்சிக்கு 2002-இல் நடைபெற்ற முதல் தேர்தலில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதில், சிவசேனை 11 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
2007 மற்றும் 2012 தேர்தல்களில் பாஜக எந்தவொரு வார்டிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், 84 வார்டுகளைக் கொண்ட மாலேகான் மாநகராட்சிக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக 56 வார்டுகளில் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், ' பாஜக இங்கு முதன்முறையாக 56 வார்டுகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 27 பேர் முஸ்லிம்கள்' என்றார்.
மாலேகான் மாநகராட்சி தற்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளது. இத்தேர்தலில் அந்தக் கட்சி 52 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 10 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் 73 வார்டுகளிலும், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி 35 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அக்கட்சி சார்பில் தற்போதைய துணை மேயர் யூனுஸ் இஸாவும், அவருடைய 3 மகன்கள் மற்றும் 2 உறவினர்கள் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com