நீதிபதி சி.எஸ்.கர்ணன் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் புதிய மனு

உச்ச நீதிமன்றம் தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சார்பில்
நீதிபதி சி.எஸ்.கர்ணன் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் புதிய மனு

புதுதில்லி: உச்ச நீதிமன்றம் தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புதிய மனு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாதது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவிட்டது உள்ளிட்ட விவகாரத்தில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், கர்ணனை உடனடியாக கைது செய்யுமாறு கொல்கத்தா போலீஸாருக்கு ஆணையிட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் சென்னை வந்தனர். ஆனால், நீதிபதி கர்ணன் எங்கு இருக்கிறார்? என்பது தெரியாததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

6 மாத சிறைத் தண்டனை உத்தரவை திரும்பப் பெறக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதாவது, உச்ச நீதிமன்றத்தின் பதிவுத் துறை அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்நிலையில், ''நீதிபதி கர்ணன் சார்பில் அவரது மகன் சுகன், இன்று குடியரசுத் தலைவரின் செயலாளர் அசோக் மேத்தாவை சந்தித்து அரசமைப்பு சட்டம் 72-வது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யுமாறு மனு அளித்துள்ளதாக அவரது வழக்குரைஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாரா கூறியுள்ளார்.

மேலும் நீதிபதி கர்ணன் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து நீதிபதி கர்ணனின் மகன் சுகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவரை சந்திக்க முடியாதால் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளிடம் மனுவை அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், எனது தந்தைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அவர் சரண் அடையமாட்டார் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com