முத்தலாக் கூறினால் சமூகப் புறக்கணிப்பு

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவார்கள் என்று அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
முத்தலாக் கூறினால் சமூகப் புறக்கணிப்பு

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவார்கள் என்று அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பான விவரங்களை திருமணத்தின்போதே மணமகனிடம் தெளிவுபடுத்துமாறு இஸ்லாமிய மத குருமார்களிடம் (காஜி) அறிவுறுத்தியுள்ளதாகவும் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
தலாக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றை முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று முறை தலாக் எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய வழக்கத்தில் உள்ளது. அதற்காக, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என்று கூறக் கூடாது என்றும் இஸ்லாமிய சட்டம் கூறுகிறது.
அதாவது, ஒரு முறை தலாக் என தனது மனைவியிடம் ஒருவர் கூறிவிட்டால், மீண்டும் அந்த வார்த்தையைக் கூற குறைந்தது மூன்று மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும். அந்த கால இடைவெளிக்குள் தம்பதிகள் மனம் ஒத்து இணைந்து வாழ வாய்ப்பிருப்பதால் அத்தகைய கட்டுப்பாடுகள் இஸ்லாமிய சட்டத்தில் வகுக்கப்பட்டன.
ஆனால், சமகாலத்தில் அந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. தற்போதைய நடைமுறையில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், விவாகரத்தை விரும்பாத பெண்களுக்கு தலாக்கை ஏற்க மறுக்கும் உரிமைகள் இஸ்லாமியச் சட்டத்தில் அளிக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதனிடையே, தலாக் நடைமுறை தொடர வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகளும் மனு தாக்கல் செய்தன. அவற்றின் மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒத்திவைத்தது.
இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில், தலாக் விவகாரம் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுதொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இஸ்லாமியச் சட்ட விதிகளின்படி கணவன் - மனைவி இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன்தான் விவாகரத்து செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வது தவறு. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும்.
இந்த விஷயங்களை திருமண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போதே மணமகனிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று காஜிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு எழும்போதே, அதனை பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சிறந்த வழி. அவ்வாறு இயலாதபட்சத்தில் பெரியவர்களைக் கொண்டு அப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
இதன் மூலம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை பெருமளவு குறையும். இதுதொடர்பான புதிய விதிகளை முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் வெளியிட்டிருக்கிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தாக்கல் செய்த இந்த மனுவை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விரைவில் பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com