அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவம்: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து
அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவம்: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டாடா நினைவு மருத்துவமனையின் 75 ஆண்டு கால சமூக சேவையைக் குறிப்பிடும் வகையில், நூல் வெளியீட்டு விழா மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், தில்லியில் இருந்தபடி காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
பவள விழா கொண்டாடும் டாடா நினைவு மருத்துவமனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
75 ஆண்டு கால சேவைக்குப் பிறகு கல்வி, மனித வள மேம்பாடு, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இந்த மருத்துவமனை புகழ் பெற்று விளங்குகிறது. இந்தியாவில் வெகு சில மருத்துவமனைகளே மனிதர்களின் துயரங்களைப் போக்கியுள்ளன.
சமகாலத்தில் புற்றுநோய் நமக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. புற்று நோய்க்கு ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
அடுத்த 30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைகள் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 108 மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேலும், டாடா நினைவு மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் வாராணசி, சண்டீகர், விசாகப்பட்டினம், குவாஹாட்டி ஆகிய நகரங்களில் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய் சிகிச்சைக்காக நெடுந்தொலைவு பயணம் செய்தவர்களுக்கு இந்த மருத்துவமனைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
உபகரணங்கள் தயாரிப்பு:நாட்டில் 70 சதவீத மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், மருத்துவச் செலவு அதிகமாகிறது.
இத்தகைய நிலை மாற வேண்டும். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் நோக்கமாகும்.
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவச் சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, தேசிய சுகாதாரக் கொள்கை ஒன்றை கொண்டு வந்திருக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் புதிதாக அகில இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் (எய்ம்ஸ்), மருத்துவக் கல்லூரிகளும் நிறுவப்படும்.
இதற்காக, வரும் நிதியாண்டுகளில் சுகாதாரத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் செலவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு விரும்புகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com