மீண்டும் "நீட்' தேர்வு நடத்தக் கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.
மீண்டும் "நீட்' தேர்வு நடத்தக் கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.
நாடு முழுவதும் "நீட்' நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, குஜராத்தி உள்பட 10 மொழிகளில் கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்படவில்லை என்றும் ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாகவும் ஆங்கில மொழியில் வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதேபோல, தமிழகத்தில் தமிழ் மொழி வினாத்தாள் எளிமையாகவும், ஆங்கில மொழி வினாத்தாள் கடினமாகவும் இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த மாணவி டி.சக்தி மலர்க்கொடி, மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் சூர்யா, சித்தார்த், அஜய் சரண் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை புதன்கிழமை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், "வினாத் தாள்களில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, "நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுக்கள் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், சிபிஎஸ்இ ஆகியவை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக "சங்கல்ப்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "பிகார் மாநிலத்தில் "நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது.
அந்த வினாத்தாள் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட "நீட்' தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதிகள் கூறியது: இதேபோன்ற மற்றொரு விவகாரம் தொடர்புடைய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து "நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உங்கள் மனுவை உடனே விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, தற்போதைக்கு உங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அதே சமயம் உங்கள் மனுவை நாங்கள் நிராகரிக்கவுமில்லை. இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் நீதிமன்றத்தில் முறையிட்டால் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com