இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை

நாடு முழுவதும் இறைச்சிக்கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்வதைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை

நாடு முழுவதும் இறைச்சிக்கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்வதைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இறைச்சி உற்பத்தியாளர்களை பாதிக்கக் கூடிய முடிவாகக் கருதப்படுகிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி இனி பசு மாடுகளை பண்ணை வைத்திருப்பவர்கள், விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே விற்கவோ வாங்கவோ முடியும். கால்நடைகளுக்காக மத்திய அரசு பிறப்பித்துள்ள முதல் உத்தரவான இது, பசு மாடுகள், காளைகள், எருதுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
மேலும், விலங்குகளை விற்பனை செய்யக் கூடிய சந்தைகளில் விலங்குகள் இறைச்சிக்காக அல்லாமல் விவசாய நோக்கங்களுக்காக மட்டுமே வாங்கப்படுவதை இந்தச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் குழுக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பசு வர்த்தகம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய அம்சமாகும். அதேசமயம் விலங்குகள் நலம் என்பது விலங்குகளுக்கான கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் கீழ் வருகிறது. தமிழகத்தில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் வகையில் அண்மையில் அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது, கேரளம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பசுவதைக்கு தடை அமலில் உள்ளது.
நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் இறைச்சி வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.26,303 கோடி மதிப்பிலான இறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் இறைச்சி வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுகிறது.
எனினும், பசு விற்பனை தொடர்பான மத்திய அரசின் புதிய உத்தரவானது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பசு மாடு விற்பனையாளர்களைக் கடுமையாக பாதிக்கும் என்ற கருத்து காணப்படுகிறது.மேலும், புதிய நெறிமுறைகளின்படி பசு வர்த்தகர்கள் அதிக அளவிலான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். பெரும்பாலும் ஏழைகளாகவும், கல்வியறிவற்றவர்களாகவும் உள்ள பசு வர்த்தகர்களுக்கு இதுவும் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதாவது, பசு மாடு ஒன்றை விற்பனை செய்ய வேண்டுமானால் அதன் உரிமையாளர் விற்பனைக்கான ஆதாரமாக 5 விண்ணப்பப் பிரதிகளைத் தயாரிக்க வேண்டும். உள்ளூர் வருவாய் அலுவலகம், மாவட்ட அரசு கால்நடை மருத்துவர், விலங்குகள் சந்தை ஒழுங்குமுறைக் குழு, மாட்டை வாங்குபவர் ஆகியோருக்கு தலா ஒரு பிரதியை அளித்து விட்டு, தன்னிடம் ஒரு பிரதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர, விலங்குகளுக்கான சந்தைகளை அமைப்பதற்கும் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, நமது சர்வதேச எல்லைக்கு 50 கி.மீ. தூரத்துக்குள்ளும், ஒரு மாநில எல்லைக்கு 25 கி.மீ. தூரத்துக்குள்ளும் அத்தகைய சந்தைகளை அமைக்க வேண்டும்என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் மத்திய அரசின் 8 பக்க உத்தரவில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com